» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே மத்திய பாஜக அரசின் வாடிக்கை : வைகோ கடும் விமர்சனம்!

சனி 10, ஏப்ரல் 2021 5:27:02 PM (IST)

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உரம் விலைகளை உயர்த்தியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோவின் அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை 58.33 விழுக்காடு,  காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 விழுக்காடு அளவுக்கு அதிகரித்து இருக்கின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை ரூ 1200க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ 700 விலை உயர்ந்து ரூ 1900 ஆகி விட்டது. ரூ 1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ 615 உயர்ந்து ரூ1775க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ 950 ல் இருந்து ரூ 400 உயர்ந்து, தற்போது ரூ 1350 ஆக விற்கப்படுகின்றது.

பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்களில், முதல் இரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுக்கின்றன.சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால் அவை, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.

உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை, பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருவதாக இப்கோ நிறுவனம் கூறி இருக்கின்றது. ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய பாஜக அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தை குறைத்துவிட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 விழுக்காடு வரை உயர்த்தி விட்டன.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உர மானியத்திற்கு ரூ 1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ 79 லட்சத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ 54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டதால்தான், இரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உரம் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


மக்கள் கருத்து

adminApr 15, 2021 - 12:12:07 PM | Posted IP 190.2*****

antha vilai yetram vidunga sir. market ku kondu pona adi matta rate ku kekkura vyabari ah pathi pesunga. atha pannale pothum. summa vilai yetram nu salambikittu

saamyApr 12, 2021 - 11:58:34 AM | Posted IP 162.1*****

thamilana thurogi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products
Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory