» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)
மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். 13பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மாளியாண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் 15க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சுற்றுலா வேனில் நேற்று இரவு பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இந்த வாகனத்தைப் பொள்ளாச்சி ஆனைமலை பிரைட் கார்டன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் சசிகுமார் (42) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 05:35 மணியளவில், இந்தச் சுற்றுலா வாகனம் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தாப்பாத்தி பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அதே தடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் சுற்றுலா வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில், வேனின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பொள்ளாச்சி மாளியாண்டிபட்டியைச் சேர்ந்த விஜயன் (58) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் பலியான விஜயனின் மனைவி கலைவாணி (50) மற்றும் வேனில் பயணம் செய்த உறவினர்கள் உட்பட மொத்தம் 14 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த 14 பேரையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயனின் மனைவி கலைவாணி, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் ஆன்மீகப் பயணத்தின் போது கணவன், மனைவி விபத்தில் பலியான சம்பவம் பொள்ளாச்சி மற்றும் எட்டயபுரம் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









