» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!

சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)



திருநெல்வேலியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், அண்ணா பல்கலை கழகம், கிவ் லைப் அறக்கட்டளை தி ரைஸ் அனைத்துலக தமிழ் எழுமின் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு இணைந்து இன்று நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர். மோனிகா ராணா துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், பூங்கோதை ஆலடி அருணா, தி ரைஸ் அனைத்துலக தமிழ் எழுமின் நிறுவனர் அருட் ம.ஜெகத் கஸ்பர் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொறுப்பேற்ற பின்னர், ஒரு புறம் பல்வேறு தொழிற்சாலைகளில் முறையான பணியாளர்கள் கிடைக்க வில்லை என்றும், மற்றொரு புறம் படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை இல்லை என்பதை நிவர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 12க்கும் மேற்பட்ட மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக தனியார் வேலை வாய்ப்பு முகாமினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்களும், எழுமின் நிறுவனர் அருட் ஜெகத் கஸ்பர் அவர்களும் ஆகியோர் நடத்தி பெருமை சேர்த்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 32 தொழிற் பூங்காக்கள், 28 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 17.95 இலட்சம் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுமார் 2.60 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப்-4 பிரிவில் 246 நபர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களில் 20 நபர்கள் தமிழ்நாடு அரசின் நான்முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று தேர்வு பெற்றுள்ளனர். இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகமானோர் கல்வி பயின்று வருகின்றனர். 41 சதவீதம் பெண்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்கள் படிக்கும் காலத்தில் நான்முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்துள்ளார்கள் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் டாடா சோலார் பவர் பிளான்ட் நிறுவனத்தை நேரில் வருகை தந்து திறந்து வைத்தார்கள். இதன் மூலம் 4000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று நாங்குநேரி மற்றும் மூலக்கரைப்பட்டி பகுதியில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக சிப்காட் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் தொழில் வளர்ச்சியினை அதிகரிப்பதற்கும், தொழிற்சாலைக்கான சிறந்த சாலை வசதியினை உருவாக்குவதற்கு திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைப்பணிகள் முடிந்தவுடன் பெரிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி இளைஞர்களுக்காக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்களின் சுமார் 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் 194-க்கும் நிறுவனங்கள் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு 15,000 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று 13,000 வேலைநாடுநர்கள் கலந்து கெர்ணடனர். இதில் 5300 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உயர்கல்வி படித்து ஒவ்வொரு ஆண்டும் லட்சகணக்கில் பட்டாதாரிகள் உருவாகின்றனர். உயர்கல்வியில் உயர்வு பெற்று இந்தியாவில் முதலிடத்தில் இருக்க தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் தான் காரணம். கல்லூரியில் படிக்கும் 1000 நபர்களில் 800 பேருக்கு எதாவது ஒரு திட்டத்தில் நிதி உதவியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஏழை எளிய மாணவர்கள் என அனைவரையும் 100 சதவீதம் உயர் கல்வி பயில வேண்டும் என்ற உன்னத என்னத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோர் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லட்சகணக்கானோர் ஆண்டுதோறும் பட்டாதாரியாகி கல்வி பயின்று வருகின்றனர் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சரவணன், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி நிறுவனர் கில்ட்டஸ்பாபு, முதல்வர் வேல்முருகன், தாமிரபரணி ரோட்டரி கிளப் தலைவர் ஆறுமுகபாண்டியன், மரிய ஆண்டனி, முக்கிய பிரமுகர் பரமசிவ ஜயப்பன், சித்திக் மற்றும் அரசு அலுவலர்கள், வேலை நாடுநர்கள், வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வேலை இல்லாதவன்Jul 5, 2025 - 10:33:47 PM | Posted IP 172.7*****

அரசு வேலை எல்லாம் கிடையாதா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory