» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டம் பயிலும் மாணவிகள் : பெரியார், அண்ணா கனவு நனவாகிறது - கனிமொழி எம்பி பேச்சு!

சனி 5, ஜூலை 2025 3:41:43 PM (IST)



சட்டக் கல்லூரியில் மாணவிகள் அதிக அளவில் பயில்வதை பார்க்கையில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கனவு நினைவாகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது என்று கனிமொழி எம்பி பேசினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (05.07.2025) நான் முதல்வன் திட்டத்தின்கீழ் "குன்றென நிமிர்ந்துநில்" என்ற தலைப்பில் சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி K.சந்துரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சட்டம் பயிலும் மாணவ மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது. பொதுவாக எல்லா இடங்களிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலை இருக்கும். ஆனால் இன்றையதினம் இந்த கூட்டரங்கில் வழக்கறிஞராக வரக்கூடிய மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர்களின் கனவு நிறைவேறி கொண்டிருக்கிறது. பெண்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

உண்மையான சமூக நீதியை பெற்றுத் தரக்கூடியது கல்வியாகும் என வலியுறுத்தினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் படித்து முடித்துவிட்டு உயர்கல்வி பயிலுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கக்கூடிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 99 சதவீதம் மாணவ மாணவியர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி சென்று இருக்கக்கூடிய மாவட்டமாக திகழ்கிறது. குறிப்பாக, சமூகத்தை மாற்றக்கூடிய வழக்கறிஞர்கள் என்பவர்கள் சிலர். அந்த வகையில் இங்கு பயிலக்கூடிய மாணவர்கள் சிறப்பாக சட்டத்தை கற்றுக் கொண்டு பணியாற்ற வேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே எந்தவித பாகுபாடும் இருக்க்கூடாது.

மாணவர்களாகிய நீங்களும் இந்த நாட்டின் சட்டங்களை புரிந்து படிக்க வேண்டும். குறிப்பாக சட்டத்தை மட்டுமல்லாது, சமூக நீதியையும், உலகத்தின் நடப்புகளையும் புரிந்து படிக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற சிந்தனையாளர்களை புரிந்து படிக்க வேண்டும். வெற்றி என்பது மட்டும் இலக்காக அல்லாமல், ஒவ்வொரு வழக்கும் ஒரு நபருடைய வாழ்க்கையை மாற்றக்கூடியது. மேலும், ஒவ்வொரு வழக்கையும் தொலைநோக்கு சிந்தனையுடன் பார்க்க வேண்டும். நியாயத்தின் பக்கத்தில் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். நியாயம் குறித்த தெளிவு வேண்டும். 

நாம் கற்றுக் கொண்ட ஒவ்வொரு விஷயங்களின் நியாயத்தை நாம் சிந்திக்கின்ற பொழுதுதான் மாற்றங்கள் நிகழும். மேலும் மாணவிகளாகிய நீங்கள் உங்களின் எல்லைகளை இவ்வளவுதான் என்று நீங்களே வரையறுத்துக் கொள்ளக்கூடாது. அந்த காலக்கட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் பெண்கள். இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் சிந்தனைகளை மாற்றக்கூடியவர்களாக, எல்லா விதமான நியாங்களாக மாற்றக்கூடிய வாய்ப்பு உங்கள் கையில் இருக்கின்றது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியின் கீழ் மாணவர்கள் பள்ளி படிப்பை படித்து முடித்துவிட்டு உயர்கல்வி பயிலுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கக்கூடிய முக்கியமான திட்டமாக செயல்படுகிறது. குறிப்பாக இன்றையதினம் சட்டம் பயிலக்கூடிய மாணவர்களை பராட்டும் விதமான இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேனாள் நீதியரசர் சந்துரு சமூக நீதிக்காகவும், பெண்களுக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும் சமுதாயத்திற்கு எடுத்துகாட்டாக அவர்களின் தீர்ப்பு விளங்கியது. 

2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் சத்துணவு பணியிடத்தில் கைம்பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு வரவேற்றக்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு கைம்பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழிகாட்டியுள்ளார்கள். நல்ல முறையில் தகுதியான வழக்கறிஞராக உங்களை தகுதிபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் வழக்குகளை வாதாடி வெற்றிப் பெறக்கூடியவர்களாக உயர வேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் : தூத்துக்குடி மாவட்டத்தில், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் (18,509) உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'கல்லூரிக்கனவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிறப்பு முயற்சியாக "பெரிதினும் பெரிது கேள் என்ற ஒவ்வொரு மாணவருக்குமான தனித்துவமான உயர்கல்வி கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் மாணவர்களின் திறனுக்கு ஏற்ற சிறந்த வாய்ப்புகளை பெற வழிகாட்டுதல்களை வழங்கி அனைத்து மாணவர்களும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதுதான். 

இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 206 பள்ளிகளை நேரடியாக அணுகி, அங்கு படிக்கும் மாணவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, எந்த பாடப்பிரிவில் மற்றும் எந்தக் கல்லூரியில் சேர முடியும் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக தொடர்பு கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

இந்த சிறப்பான முன்னெடுப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற 18,509 மாணவர்களில், 18,434 (99.3%) மாணவர்கள் உயர்கல்வி அல்லது தொழிற்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர். உயர்கல்வியின் விகிதத்தை உயர்த்துவது மட்டும் நோக்கமாக கொள்ளாமல், ஒவ்வொரு மாணவருக்கும் திறனுக்கு ஏற்ற படிப்புகளைப் பெறுவதற்கு தனித்தனி வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் மதிப்பெண்கள், தகுதி மற்றும் வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் பல்வேறு வகையாக வகைப்படுத்தப்பட்டு உயர்கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டு தனித்தனியான வழிகாட்டுதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் (>96%): உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற 158 மாணவர்கள் மற்றும் 130 பெற்றோர்கள் (48 பள்ளிகள்) பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள்: 7.5% இட ஒதுக்கீட்டினை பெற வாய்ப்பு உடைய மாணவர்கள் சிறப்பு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உள்ள நல்ல உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்பட்டது. இதில் 114 அரசு பள்ளி மாணவர்கள் (39 பள்ளிகள்) பங்கேற்றனர். 

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள்: காயல்பட்டினம்பகுதியில் ஜமாத் பெரியவர்கள் மூலம் இஸ்லாமிய மாணவர்களிடம் உயர்கல்வி பெறுவதில் இருக்கும் சிக்கல்களைக் கலைந்து அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதில் 95 பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகள் மற்றும் 90 பெற்றோர்கள் (7 பள்ளிகள்) பங்கேற்றனர். மீனவர்களின் குழந்தைகள்: இந்த நிகழ்வில் 21 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 120 மாணவர்கள், 100 பெற்றோர்கள், 50 கிராமத் தலைவர்கள், 40 பள்ளிகள் ஆகியோர் பங்கேற்றனர். மீனவ சமுதாய மாணவர்களுக்கு மாற்று வாழ்க்கை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

பெற்றோரை இழந்த மாணவர்கள்: மாவட்டத்தில் உள்ள அனைத்து பெற்றோரை இழந்த மாணவர்களும் வரவழைக்கப்பட்டு உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்விச் செலவுகளுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 43 பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பெற்றோர் இல்லாத மாணவர்கள், 45 பாதுகாவலர்களுடன் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதில் 128 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 70 பேர் ஏற்கனவே கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். 

மீதமுள்ள சிறப்பு குழந்தைகளுக்கான (Special Childs) மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் வழி மாணவர்கள்: தமிழ் வழியில் பொறியியல் கல்வி பயில்வது குறித்தும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு குறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்யப்பட்டது. இதில் 45 பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 79 தமிழ் வழி (PSTM) மாணவர்களுக்கு பொறியியல் கல்வி போன்ற வாய்ப்புகள் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விளையாட்டு வீரர்கள்: விளையாட்டில் சிறந்து விளங்கும் 245 மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற படிப்புகள் குறித்து விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தும் தனித்தனியான வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டு வருகின்றது.

சட்டக் கல்வி மாணவர்கள் இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மூலம் தற்போதுவரை 204 மாணவர்கள் சட்டக் கல்விக்கு விண்ணப்பத்துள்ளனர். அதில் 58 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் என மொத்தம் 73 மாணவர்கள் தற்போது சட்டக் கல்வி பயிலும் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்: 5 மாணவர்கள் - School Of Excellence In Law, சென்னை, 1 மாணவர் - தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 67 மாணவர்கள் - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இணைந்த அரசு சட்டக் கல்லூரிகள்.இவர்கள் பலர் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், ஊரக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளி மாணவர்கள்: 28 (7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் 20), அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்: 31, தனியார் பள்ளி மாணவர்கள்: 14 என மொத்தம் 73 மாணவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், இன்றையதினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டம் பயிலக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகத்தை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory