» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:48:03 PM (IST)

"பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தால், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்" என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வி யடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.

பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர்  இனியாவது உணர வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory