» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் வசூலில் ஒருவர் பலி : நிதி நிறுவன, காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை

ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:34:04 PM (IST)

வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய முயன்றபோது ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை - தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கரன் (45). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து 2020 ஆண்டு ரூ. 5 லட்சம் கடன் பெற்றுள்ளார். பெற்ற கடனை அடைப்பதற்கு மாதந்தோறும் ரூ. 11 ஆயிரம் வீதம், நிதி நிறுவனத்துக்கு தவணை தொகை திருப்பி செலுத்தி வந்துள்ளார். இடையில் ஏற்பட்ட வாழ்க்கை நெருக்கடி காரணமாக முறையாக தவணை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதி நிறுவனம் அடகு பெற்ற வீட்டை ஜப்தி செய்ய, நீதி மன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுள்ளது. இதனை ஆதாரமாகக் கொண்டு தூத்துக்குடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில், முறப்பநாடு காவல்துறையினர், நிதி நிறுவன அதிகாரிகள், வழக்கறிஞர்கள் படையோடு சென்று, வீட்டை ஜப்தி செய்ய முயன்றிருக்கிறார்கள். சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும், குழந்தைகளும் கடனை அடைக்க மேலும் கால அவகாசம் கேட்டு கதறியதை, அங்கு யாரும் காது கொடுத்து கேட்காமல், ஜப்தி நடவடிக்கையில் முனைப்பு காட்டிய போது, பத்திரகாளி காவல் துறை அதிகாரி முன்பு விஷம் குடித்துள்ளார்.

அதனை காவலர் ஒருவர் தடுத்து, தட்டி விட்டதால், கீழே விழுந்த விஷமருந்து பாட்டிலை எடுத்து, சங்கரனும் குடித்துள்ளார். இருவரும் வாயில் நுரை தள்ளி விழுந்து, உயிருக்கு போராடிய நிலையிலும், அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும் நடிப்பதாக அலட்சியப்படுத்தி, வீட்டை ஜப்தி செய்வதில் குறியாக இருந்துள்ளனர்.

காலம் கடந்த நிலையில் விஷம் குடித்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கரன் மரணமடைந்து விட்டார். அவரது மனைவி பத்திரகாளி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இவர்களது பானு (18) கல்யாணி (16) ஆகிய இரண்டு மகள்களும் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற துயரச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இசக்கிமுத்து குடும்பம் கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவல வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் விவசாயி சங்கரசுப்பு என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து மாண்டு போனார். இப்படி தொடரும் துயரச் சம்பங்களை தடுக்கும் முறையில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முறைக்கு பொருத்தமான, சட்டம் நிறைவேற்றி, விதிமுறைகள் உருவாக்க வேண்டியது உடனடி அவசியமாகும்.

கடன் வசூலில் மனிதாபிமானம் காட்டாமல், சட்டவிரோதமாக நடந்து கொண்ட நிதி நிறுவன அதிகாரிகள், அவர்களுக்கு ஆதரவாக சென்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத் தலைவரை இழந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பத்திரகாளிக்கு உயர்ந்தபட்ச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவர்களது இரண்டு பெண்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு அவர்களது உயர்கல்வி செலவுகளை அரசு ஏற்க வேண்டும். குடும்ப நிதி வழங்கி மறுவாழ்வு ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த வகைச் செலவுகள் அனைத்தையும் தனியார் நிதி நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

படித்து வேஸ்ட் ஆனவன்Feb 3, 2025 - 06:35:08 PM | Posted IP 162.1*****

அந்த நிதி நிறுவனம் பெயர் ஒழுங்கா போடுங்க

நன்றிFeb 3, 2025 - 09:58:31 AM | Posted IP 172.7*****

எந்த தனியார் நிறுவனம் பெயர் என்ன

கோதர் மைதீன் தமுமுகFeb 2, 2025 - 07:42:26 PM | Posted IP 172.7*****

நிதி நிறுவனங்களுக்கு சீல் வைத்து நிதி நிறுவன உரிமையாளர், பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் என அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திரகாளி குழந்தைகள் 2 பேருக்கும் அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory