» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் ஏலம் முறை மாற்றம்: பொதுமக்கள் குவிந்தனர்!

ஞாயிறு 2, பிப்ரவரி 2025 9:28:55 AM (IST)



தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரவில் மீன்கள் ஏலம் விடும் முறை மாற்றப்பட்டு நேற்று காலையில் மீன்கள் ஏலம் விடப்பட்டது. மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைபடகுகள் உள்ளன. இந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் தங்குகடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும். கேரளா விசைப்படகுகள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும். அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப் படகுகளை சிறைபிடித்தது தொடர்பாக 11 விசைப்படகு மீனவர்கள் மீது மீன்வளத் துறை சார்பில் பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மீனவளத்துறை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் கடந்த 30-ந்தேதி வாபஸ் பெறப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாலையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இரவு 8 மணிக்கு மேல் கரைக்கு திரும்புவது வழக்கம். மேலும் இவர்கள் பிடித்து வரக்கூடிய சிறிய மற்றும் பெரிய மீன்களை அன்றையதினமே இரவு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் ஏலத்தின் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

தற்போது மீனவர்களின் கோரிக்கையின்படி, இரவில் ஏலம் நடைபெறாமல், நாள்தோறும் காலை 8 மணிக்கும், சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கும் மீன்கள் ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது அதன்படி நேற்று முன்தினம் இரவு விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக இரவு நடைபெறும் மீன்களின் ஏலம் நிறுத்தப்பட்டு, நேற்று காலை 7 மணிக்கு மீன்களின் ஏலம் நடைபெற்றது. இதன் காரணமாக தூத்துக்குடி விசைபடகு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ.1,300-க்கும், சூறை மீன் ஒரு கூடை ரூ.9 ஆயிரத்திற்கும், நெத்திலி ரூ.4 ஆயிரத்து 600-க்கும், பாறை மீன் ரூ.3 ஆயிரத்து 600-க்கும், முண்டக்கண்ணிப்பாறை ரூ.2 ஆயிரத்து 500-க்கும், காரல் ரூ.1,900-க்கும் சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500-க்கும், கொச்சம்பாறை மீன் ஒரு கூடை ரூ.1,200-க்கும் விற்பனையானது. மீனவர்களின் வலையில் நண்டுகளும் அதிகளவில் கிடைத்தன. அவற்றை ஏலக்கூடத்தில் குவித்து வைத்திருந்தனர். அதனை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்றனர். அதிகளவில் கிடைத்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இனிமேல் நாள்தோறும் காலை 8 மணிக்கும், சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கும் மீன்கள் ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory