» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு: சுற்றுசூழல் ஆர்வலர் கோரிக்கை!

திங்கள் 20, ஜனவரி 2025 11:18:19 AM (IST)


திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் கடலுக்குள் நிரந்தர கடின கட்டுமானம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் வே.குணசீலன் வெளியிட்ட அறிக்கையில், "கடல் அரிப்பு என்பது அலைகள்,கடல் நீரோட்டம், காற்றின் திசை காரணமாக இயற்கையாக உலகம் முழுக்க கடற்கரை மண் அரித்து செல்லப்படும் இயற்கையான நிகழ்வு ஒன்று தான். பருவ நிலை மாறுபாடுகள் காரணமாக தற்போது உலகம் முழுக்க கடலரிப்பு அதிகமாக நிகழ்ந்து வருகிறத. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் நடக்கும் கடல் அரிப்பு என்பது முழுக்க முழுக்க மனித தவறுகளால் நடக்கும் ஒன்று ஆகும்.

பொதுவாக திருச்செந்தூர் பகுதிகளில் காற்றின் திசைக்கேற்ப தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 8 மாதங்கள் கடல் நீரோட்டமும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி 4 மாதங்கள் கடல் நீரோட்டம் என மாறுபடும். இந்த சமயத்தில் கடல் அலைகள் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதியில் கடல் மண்ணை அரிக்கும். கடந்த சில ஆண்டுகளாக மனித தவறுகளால் கடலுக்குள் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்களால் ஒரு பக்கம் கடல் அரிப்பும், மறுபக்கம் கடற்கரை மண் மேடு ஆவதும் நம் பகுதியில் தொடர்கதை ஆகிவிட்டது.

குறிப்பாக உடன்குடி அனல்மின் நிலையத்துக்காக கல்லாமொழியில் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நிலக்கரி இறங்கு தளம் கடந்த 2018ம் ஆண்டு முதல் அமைக்கபட்டு வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஆலந்தலை பகுதியில் அதிகமானது, அதே நேரம் மணப்பாடு பகுதியில் மண்மேடுகள் அதிகமாகி மீனவ மக்கள் தொழிலுக்கு இடையூறு விளைவித்து வருகிறது.

ஆலந்தலை கிராமம் கடல் அரிப்பால் பாதிக்கபட்டதை தொடர்ந்து மீனவ மக்கள் குரல் எழுப்ப ஆலந்தலையில் 2021ம் ஆண்டு வாக்கில் தூண்டில் பாலம் ஒன்று அமைக்கபட்டது. ஆலந்தலையில் தூண்டில் பாலம் அமைக்க பட்ட பிறகு அமலி நகர் பகுதியில் கடல் அரிப்பு அதிகமானது. இதனை தொடர்ந்து அமலி நகர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தற்போது அமலி நகர் பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க 70% பணிகள் முடிவடைந்து விட்டது.

இதனால் திருச்செந்தூர் கோவில் பகுதியில் தற்போது அளவுக்கு அதிகமான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இனி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடலில் தடுப்பு சுவரோ, தூண்டில் பாலமோ கட்டினால் அது வீரபாண்டியன் பட்டினம் கடற்கரையை பாதிக்கும். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் கடல் அரிப்புக்கு தீர்வு தொடர்பான ஒரு ஆணை வெளியிட்டது. அதன்படி கடல் அரிப்பை தடுக்க கடலுக்குள் கடினமான கட்டுமானங்கள், தடுப்பு சுவர் போன்றவை கட்ட கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனால் நடந்தது என்ன. அமளி நகர் பகுதி கடல் அரிப்பால் பாதிக்க பட்டதால் அங்குள்ள மீனவ மக்கள் போராடியதை தொடர்ந்து தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள், தூண்டில் பாலம் அமைக்க தடை என்பதால் நாங்கள் தூண்டில் வளைவு அமைக்கிறோம் என்று திட்டத்தின் பெயரை மட்டும் சற்றுமாற்றி நூதனமாக அனுமதி பெற்று பணிகள் நடந்தது. 

இதனால் தான் தற்போது திருச்செந்தூர் கோவில் கடற்கரை கடல் அரிப்பால் பாதிக்கபட்டு உள்ளது. இனியும் கடல் அரிப்பால் திருச்செந்தூர் கடற்கரையை காக்க கடற்கரை மேலாண்மை சட்டங்களை பின்பற்றாமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை பின்பற்றாமல் கடினமான கட்டுமானங்களை நம் பகுதி கடலுக்குள் மேற்கொண்டால் வீரபாண்டியன் பட்டினம் கடற்கரையோ, காயல்பட்டினம் கடற்கரையோ கொம்பு துறையோ, சிங்கி துறையோ, புன்ன காயல் கடற்கரையோ அடுத்த கடல் அரிப்பால் பாதிக்கப்படும் என்பது தான் உண்மை.


தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இனி நம் பகுதி கடற்கரையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கடலுக்குள் நிரந்தர கடின கட்டுமானம் அமைப்பதை நிறுத்த வேண்டும். கடல் நீரோட்டம், கடற்கரை வரைபடம், கடல் அலைகள் இவற்றில் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்களின் உதவியுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளூர் மக்களை கலந்தாலோசித்து இயற்கையான அரண்கள் அமைத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

kannanJan 20, 2025 - 12:42:21 PM | Posted IP 162.1*****

ஐ.ஐ.டி. முட்டாள் பொறிஞர்களின் செயலே காரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory