» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா
வெள்ளி 10, ஜனவரி 2025 8:05:21 PM (IST)
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் சமத்துவப் பொங்கல் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, கரும்புகள், வாழைக்கன்றுகள் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்து வந்து பெண் அலுவலர்கள் குலவையிட்டபடி, பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொண்டு பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி பழங்கள், பொங்கல், பனங்கிழங்கு, கரும்பு உள்ளிட்டவற்றை படைத்து தீபாரதனை காட்டி அனைவரும் வழிபட்டனர்.
பின்னர் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஏராளமான அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி பொங்கல், கரும்பை பரிமாறிக்கொண்டு, உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.