» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 10, ஜனவரி 2025 4:55:35 PM (IST)
நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சயன கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நவத்திருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த தலங்களில் சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், சந்திரனுக்கு அதிபதியாக நத்தம் விஜயாசனப் பெருமாள், புதனுக்கு அதிபதியாக திருப்புளிங்குடி காய்சின வேந்த பெருமாள், கேதுவுக்கு அதிபதியாக இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், ராகுக்கு அதிபதியாக தேவபிரான், சனிக்கு அதிபதியாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், சுக்கிரனுக்கு அதிபதியாக தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், செவ்வாய்க்கு அதிபதியாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குருவுக்கு அதிபதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் என ஒன்பது சிறப்பு பெற்று விளங்குகின்றன.
இந்த நவத்திருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அனைத்து நவத்திருப்பதி தலங்களிலும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் தேவியருடன் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒரே நாளில் 9 பெருமாளையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே 9 நவத்திருப்பதி தலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.