» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டம்: பெ.மணியரசன் நேரில் ஆதரவு!
வெள்ளி 10, ஜனவரி 2025 4:14:16 PM (IST)
பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கலந்துகொண்டு ஆதரவளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, மூன்று கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் போராடி வருகின்றனர். அதற்கு அரசு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் பெரிய ஊரான பொட்டலூரணியில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினால் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரும் தீர்மானத்தை மக்கள் கொண்டுவந்து விடுவார்கள் என்பதால், பொட்டலூரணியில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தாமலே அரசு அலுவலர்கள் புறக்கணித்துவந்தனர். எனவே பொட்டலூரணி மக்கள் ஒன்று கூடி, "மக்கள் கிராமசபைக் கூட்டம்" என்ற பெயரில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினர். அதில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர். பொட்டலூரணியைச் சேர்ந்த ஒட்டுமொத்த ஊராட்சி உறுப்பினர்களும் தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி பதவி விலகல் செய்தனர்.
தேர்தல் புறக்கணிப்பிற்குப் பிறகு போராட்டப்பந்தல் அமைத்து தொடர் போராட்டமாக நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டத்தின் 240 ஆவது நாள் மற்றும் மாதக்கூடல் நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. நிகழ்வில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாயணன் தலைமை ஏற்றார். போராட்டக் குழு பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகம் வரவேற்புரையாற்றினார். பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர். நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளர் மணிமாறன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைக்குழுப் பொறுப்பாளர் தமிழ்மணி, மக்களதிகாரத்தைச் சேர்ந்த தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த வைகுண்டமாரி, தாமஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பொறுப்பாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில், "தொழில் வளர்ச்சி என்ற பெயரில், அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள், கையூட்டுப் பெற்றுக் கொண்டு கழிவுமீன் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கின்றனர். அரசு ஆதரவு பெற்ற சில முதலாளிகளின் பெருங்கொள்ளைக்காக தமிழ்நாடு குப்பைக் கிடங்காக ஆக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அழிக்கப்படுகிறது.
ஒரு கிழக்கிந்திய வெளிநாட்டு நிறுவனத்தை விரட்ட வ.உ.சி., கட்டபொம்மன், சுந்தரலிங்கம் போன்றோர் ஈகம் செய்த தூத்துக்குடி மண்ணில், வெளி மாநிலத்தார் நிறுவனங்களையும், இம்மண்ணிற்குக் கேடு விளைவிக்கும் நச்சு ஆலைகளையும் அனுமதிக்க முடியாது. அந்த வகையில், பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவு மீன் நிறுவனங்களை அரசு உடனடியாக மூட வேண்டும்; மூடும் வரை தமிழ்த் தேசியப் பேரியக்கம் பொட்டலூரணி மக்களோடு நின்று போராடும். பல்வேறு அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு தமிழ்நாடு அளவிலான போராட்டமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும்" என்றார்.