» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் கலரை மாற்றி ஓட்டியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: போதையில் வந்தவரின் ஆட்டோ பறிமுதல்!
வெள்ளி 29, நவம்பர் 2024 4:15:40 PM (IST)
நாகர்கோவிலில் மோட்டார் பைக்கின் கலரை மாற்றி ஓட்டியவருக்கு போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆட்டோ டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ஹெல்மெட், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்டு வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் மிக அதிகமான ஒலி எழுப்பும் சைலன்ஸருடன் மோட்டார் சைக்கிளை இயக்கியதுடன் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஓட்டியது தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தின் நிறத்தை மாற்றியும் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் மோட்டார் வாகன சட்ட பிரிவின்படி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதேபோல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் ஆகியோர் நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் ஓட்டி வந்தது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்ததுடன் அந்த நபருக்கு அபராதம் விதித்தனர்.
இதேபோல் ஆட்டோ டிரைவர் ஒருவரும் குடிபோதையில் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட காரையும், ஆட்டோவையும் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் காரை ஓட்டி வந்தவர் மற்றும் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் லைசென்ஸை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.