» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் : ஆட்சியர் தகவல்

சனி 23, நவம்பர் 2024 3:58:46 PM (IST)



நம்முடைய கிராமங்கள் சார்ந்த பொருளாதாரத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், திருப்பணி செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் கிராமசபைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த துறை சார்ந்த திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசியதாவது:- நிறைய மகளிர் குழுக்களில் இருந்து கிராம சபையில் பங்கெடுத்துள்ளீர்கள். இது மிகவும் சந்தோசமான விசயம். இந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் குழுவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே, சில நலத்திட்டங்கள், சில முக்கியமான துறைகளைப்பற்றி எல்லாம் சொல்லி இருந்தார்கள். குறிப்பாக, மருத்துவத்துறை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மகளிர் திட்டம் மற்றும் வேளாண்மைத் துறையிலிருந்து சில முக்கியமான திட்டங்களை அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். நீங்களும் சில கோரிக்கைகளை கிராம சபையில் தெரிவித்துள்ளீர்கள். அதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பேருந்து வசதி மற்றும் மின்சார வசதி பற்றி கோரிக்கை வைத்துள்ளீர்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் கூடுதல் வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக தேனீவளர்ப்பு, விவசாய காய்கறிகள் தோட்டம் போன்ற தொழில்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

ஏனெனில் நேரடி விவசாயத்தை விட விவசாயம் சார்ந்த தொழில்களில் வளர்ச்சி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. கால்நடைத் துறையிலிருந்து கால்நடை மருத்துவர்கள் வந்துள்ளார்கள். கோழி வளர்ப்பு மற்றும் கோழி சம்பந்தப்பட்ட விசயங்களில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பயன் பெறுங்கள். 

கால்நடைத்துறையிலிருந்து பசுமாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான செயற்கை கருவூட்டலினை நூறு சதவீதம் ஏற்படுத்த ஒரு இலக்காக கொண்டு ஒரு திட்டம் வகுத்துக் கொண்டுள்ளார்கள். நம்முடைய கிராமங்கள் சார்ந்த பொருளாதாரத்தில் விவசாயத்தை சார்ந்து இருக்க்கூடிய கோழிவளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி செய்தல் ஆகியவற்றில் இருந்து வருமானங்கள் அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகையால் இவற்றையெல்லாம் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடல் நலத்தைப் பேணுவதற்கான நமது மருத்துவத்துறை சொல்லக்கூடிய ஆலோசனைகளையெல்லாம் நீங்கள் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற கிராமம் என்பதை உறுதி படுத்தியுள்ளீர்கள். அதற்காக நிறைய விருதுகளையும் பெற்று சிறந்த கிராம ஊராட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எந்த விசயமாக இருந்தாலும் அலுவலரை நேரடியாக அணுகி தனது ஊராட்சிக்காக நல்ல விசயங்களை செய்து கொடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வரக்கூடிய உங்கள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

எந்த நோக்கத்திற்காக ஊராட்சி சுயாட்சிக்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டதோ, அதனை கருத்தில் கொண்டு உள்ளுரில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சரி செய்து கொடுப்பதற்காக தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அதை இந்த ஊராட்சியில் சிறப்பாக செய்கிறீர்கள். இதேபோன்று இந்த ஊராட்சியினை ஒரு முன்மாதிரி ஊராட்சியாக வைத்து பிற ஊராட்சிகளில் இதனை விரிவுபடுத்த முயற்சி செய்வோம். 

இங்க பங்கேற்றிருக்கக்கூடிய அனைத்து மக்களும் அரசு நலத்திட்டங்களையும், பிற அரசுத்துறைகளினுடைய திட்டங்களையும் நல்ல படியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கெள்கிறேன் எனத் தெரிவித்தார்

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்ணேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ஹபிபூர் ரஹ்மான், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) மனோரஞ்சிதம், திருப்பணிசெட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுயம்புலிங்கம், அரசு உயர் அலுவலர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory