» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயிகளை கடித்து குதறிய காட்டுப்பன்றி அடித்து கொலை?: வனத்துறை விசாரணை
சனி 23, நவம்பர் 2024 8:20:05 AM (IST)
எட்டயபுரம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி 3 விவசாயிகளை தாக்கி கடித்து குதறியது. படுகாயத்துடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (62). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து கதிர் பிடிக்கும் தருவாயில் உள்ளன.
நேற்று காலையில் மோகன்ராஜ் தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தது. உடனே மோகன்ராஜ் காட்டுப்பன்றியை விரட்ட முயன்றார். அவரைக் கண்டதும் காட்டுப்பன்றி ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து அவரை தாக்கியது. அவரது கையிலும் கடித்து குதறியது.
இதில் படுகாயமடைந்த மோகன்ராஜ் கூச்சலிட்டார். மேலும் செல்போன் மூலம் பக்கத்து தோட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகராஜ் (54) ராமசாமி (62) ஆகியோரும் காட்டுப்பன்றியை விரட்ட முயன்றனர். அவர்களையும் காட்டுப்பன்றி தாக்கியது. அவர்களது கை, கால்களிலும் கடித்து குதறியது.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டுப்பன்றியை விரட்டினர். படுகாயமடைந்த 3 விவசாயிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘‘வானம் பார்த்த மானாவாரி பூமியான எட்டயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன.
இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். பலரும் விவசாய பணிகளை தொடங்காமல் நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். எனவே, விளைநிலங்களில் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்த விவசாயிகளுக்கும், சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையே விவசாயிகளை தாக்கிய காட்டுப்பன்றி அங்குள்ள காட்டு பகுதியில் இறந்து கிடந்தது. அதனை யாரேனும் அடித்து கொன்றனரா? அல்லது அதன் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.