» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாகனை இழந்து பரிதவிக்கும் திருச்செந்தூர் யானை : சரியாக உணவு உட்கொள்ளவில்லை!
புதன் 20, நவம்பர் 2024 8:29:49 AM (IST)
பாகனை இழந்த சோகத்தில் சரியாக உணவு உட்கொள்ளாமல், திருச்செந்தூர் கோவில் யானை சோகமாக பரிதவித்து வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை உள்ளது. இந்த யானையை வ.உ.சி. தெருவை சேர்ந்த சதாசிவன் மகன் உதயகுமார் உதவி பாகனாக இருந்து பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை உதயகுமார் பணியில் இருக்கும்போது அவரைப் பார்ப்பதற்காக உறவினர் சிசுபாலன் யானை கட்டும் இடத்திற்கு வந்தார்.
அப்போது யானை முன்பு நின்று புகைப்படம் (செல்பி) எடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த யானை துதிக்கையால் சிசுபாலனை பிடித்து சுவரில் வீசியது. அவரை காப்பாற்றச் சென்ற பாகன் உதயகுமாரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் இருவரும் முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த இருவரது உடலும் நேற்று பகலில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, இருவரது உடலுக்கும் திருச்செந்தூர் கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, தன்னுடன் பாசமாக பழகி வந்த பாகன் உதயகுமார் இறந்த சம்பவத்தையடுத்து நேற்று முழுவதும் தெய்வானை யானை சோகமாகவே காணப்பட்டது. யானை பாகன் இறந்து கிடந்த இடத்தையே அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தது. இது காண்போரின் நெஞ்சை பெரிதும் உருக்கியது.
நேற்று வழக்கமாக உண்ணும் உணவை விட குறைவான அளவே உட்கொண்டது. இதனால் கால்நடை மருத்துவ குழுவினர் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து யானையை பரிசோதனை செய்து வருகின்றனர்.
யானை தெய்வானை தொடர்ந்து 5 நாட்கள் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளது. அவர்கள் யானையின் நடவடிக்கை, செயல்பாடுகளை அறிந்த பின்னர், அதுதொடர்பான முழு விவரத்தையும் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
யானைப்பாகன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை வரை அடைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கடை முன்பும் கருப்பு துணி கட்டப்பட்டிருந்தது.
ஒருவன்Aug 11, 1732 - 08:30:00 AM | Posted IP 172.7*****