» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
புதன் 20, நவம்பர் 2024 8:23:45 AM (IST)
ஒரே நாளில் 29 ஆயிரத்து 212 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அகர்வால் கோல் கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த நிலக்கரி எம்.வி.சோழா செரினிட்டி என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4-வது கப்பல் தளத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த கப்பலில் இருந்து டெல்டா இன்ப்ரா லாஜிஸ்டிக்ஸ் (வேல்டுவைட்) லிமிடெட் நிறுவனம் மூலம் நிலக்கரி இறக்கி கையாளும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஒரே நாளில் 29 ஆயிரத்து 212 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு துறைமுகம் புதிய சாதனையை படைத்துள்ளது. இதனால் இதற்கு முன்பு ஒரே நாளில் 25 ஆயிரத்து 900 டன் நிலக்கரி கையாண்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாதனை படைத்த ஊழியர்கள், சரக்கு கையாளும் நிறுவனத்தினரை வ.உ.சி. துறைமுகம் நிர்வாகத்தினர் பாராட்டினர்.