» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தொடர்பு; போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பிய கைதி சிக்கினான்!

புதன் 20, நவம்பர் 2024 8:12:34 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ் வேனில் இருந்து கீழே குதித்து தப்பிய கைதி சிக்கினான்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாளையங்கோட்டை செல்லும் சாலையில் மேலபாண்டிபுரம் ெரயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து மணியாச்சி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில், பிணமாக கிடந்தவரின் தலையில் 16 வெட்டுக் காயங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி பாறைக்குட்டம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த வீரமணி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரிலும் மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த 2 சம்பவங்களிலும் அரிவாள் வெட்டு ஒரே மாதிரி இருந்ததால் ஒரே கும்பல் தான் இதை செய்திருக்க வேண்டும் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக மணியாச்சி டி.எஸ்.பி., குருவெங்கட்ராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் ஆகியோர் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கேசவன் (22) என்பவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், 2 சம்பவங்களையும் செய்ததை கேசவன் ஒத்துக் கொண்டார்.

மேலும் இந்த 2 சம்பவங்களிலும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் தெற்கு ஆரைக்குளம் கிராமத்தை முருகன் மகன் முத்துக்குமார் (22) ஆகியோர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கேசவனை போலீசார் கைது செய்தனர். கைதான கேசவன் மீது தாளமுத்துநகர் போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேசவனுக்கு உதவி செய்த 17 வயது சிறுவன் மற்றும் முத்துக்குமாரை நேற்று முன்தினம் மணியாச்சி போலீசார் கைது செய்தனர். கைதான சிறுவனை தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூரில் உள்ள இளைஞர் கூர்நோக்கு பள்ளியில் அடைப்பதற்காக பாறைகுட்டம் வழியாக நேற்று முன்தினம் இரவு போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

பாறைக்குட்டம் அருகே வந்தபோது போலீஸ் வேனில் இருந்து சிறுவன் போலீசாரை தள்ளிவிட்டு கீழே குதித்து தப்பி ஓடினான். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சிறுவனை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். முத்துக்குமாரை ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory