» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்பி எடுத்தபோது யானை தாக்கியுள்ளது : வனசரக அலுவலர் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 19, நவம்பர் 2024 10:39:07 AM (IST)
திருச்செந்தூர் கோவில் யானையை செல்பி எடுக்க முயன்றதால் 2பேரை தாக்கியதாக வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தெய்வானை யானை தாக்கியதில் யானையின் பாகன் உதயகுமார், மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவில் யானையை கோவில் நிர்வாகம் கண்காணித்து வந்தது. தொடர்ந்து யானையை வன அலுவலர்கள் சோதனை செய்தனர்.
பெண் யானைக்கு மதம் பிடிக்காது என்ற நிலையில் யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வந்த வன அலுவலர் ரேவதி ரமணன், சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது. பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. தெய்வானை ஏன் இப்படி நடந்து கொண்டது என தெரியவில்லை. 2 பேரை தெய்வானை தாக்கியது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே யானை கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது மொபைல் போனில் செல்பி எடுக்க முயன்ற பொழுது யானை தாக்கியது தெரியவந்துள்ளது. பாகனின் உறவினர் சிசுபாலன் யானை தெய்வானை அருகே நீண்ட நேரம் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை ஆத்திரமடைந்து சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியது தெரியவந்துள்ளது. அதேபோல் சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாக வன அலுவலர் கவின் தெரிவித்துள்ளார்.