» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

செவ்வாய் 8, அக்டோபர் 2024 4:08:45 PM (IST)

தூத்துக்குடி  மாவட்டத்தில்  அகவை  முதிர்ந்த  தமிழறிஞர்கள்  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது.  தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை  வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.  

தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்  பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும்  அகவை முதிர்ந்த தமிழறிஞர்  பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம்  ஆண்டிற்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

"மகளிர் உரிமைத்தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது”.

விண்ணப்பிக்கத் தகுதிகள்: ‘01.01.2024 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்’. ‘ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்’. வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும், தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தினை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024குள் அளிக்கப்பட வேண்டுமெனவும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory