» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்.
செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:40:33 PM (IST)
குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (01.10.2024) துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பேசுகையில்-
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கு வெற்றிப்பெற்ற அனைத்து வீரர் வீரங்கனைகளும், மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றிபெற்று முதலமைச்சர் கோப்பையினை பெற்று நமது மாவட்டத்திற்கு கொண்டு வந்து பெருமை சேர்ந்திட கேட்டுக்கொள்கிறேன்.
விளையாட்டு என்பது ஒருவருக்கு மனஉற்சாகத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்க கூடிய ஒன்றாகும். என்னை பொறுத்த வரைக்கும் விளையாட்டு என்பது முதலாவதாகவும், படிப்பு இரண்டாம் பட்சமாகவும் வைத்துள்ளேன். ஏனென்றால் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் போது, நம் ஒவ்வொருவருடைய மூளைக்கும் அதிகளவு சக்தி கொடுப்பதோடு, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்ஒருபகுதியாக 2023-24ம் நிதி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் 2023ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு துணை அமைச்சர் மானியக்கோரிக்கையில் அறிவித்ததின்படி இன்று விருதுநகர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, அனைத்து ஊராட்சிகளுக்குட்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள், வயதானோர் பயன்பெறும் வகையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் மற்றும் வயதனோர் பயன்பெறும் வகையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களில் கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, பூபந்து, ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டி ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி உள்ளிட்ட 33 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் தொடர்பான பேட், கிரிக்கெட் பந்துக்கள் 4, கிளவுஸ் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்பான 9 உபகரணங்கள் உள்ளன. வாலிபால் வலை, கால்பந்துகள், கேரம் பவுடர், கேரம் காயின் 2 செட், 5 சிலம்பம் குச்சிகள், செஸ் போர்டு, 12 கபடிக்கான தொப்பி, டி சார்டு 100 உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு உபகரணங்களின் பாதுகாவலர்கள் அந்தந்த ஊராட்சிகளுக்குட்பட்ட ஊராட்சிமன்ற தலைவர், விளையாட்டு மன்றத்தலைவர், ஊராட்சி செயலர் உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி பகுதிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைத்தலைவர், ஊராட்சி அளவிலான குழுமத்தலைவர் ஆகியோர் விளையாட்டு உபகரணங்களின் பாதுகாவலர்கள் ஆவார்கள்.
மாவட்ட அளவிலான விளையாட்டு கண்காணிப்புக்குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், இளைஞர்கள் அந்த ஊராட்சி விளையாட்டுக்குழு உறுப்பினர்களாக பதிவு செய்து, விளையாட்டு உபகரணங்கள் பெற்று பயிற்சியில் ஈடுபடலாம்.
பயிற்சி மேற்கொண்ட பின் உபகரணங்களை மீண்டும் முறையாக ஒப்படைத்தல் வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்ட வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் சேர்ந்து பயனடைய வழிவகை செய்யப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து தரப்பினரும் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் எடுத்து விளையாடலாம். விளையாடி முடித்தவுடன் பத்திரமாக விளையாட்டு வீரர், வீராங்களை வைக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்களை நூலகங்கள், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கல்லூரிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 5 பிரிவுகளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வைத்து நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தை 25,000 க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் தனிநபர் போட்டியில் முதல்பரிசு பெற்றவர்களும் குழுப் போட்டியில் சிறந்த முறையில் விளையாடி தேர்வு பெற்றவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 04.10.2024 முதல் துவங்க உள்ளது. மாநில அளவிலான போட்டிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிலிருந்து 843 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்வதோடு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் படிப்பினை எதிர்கொள்ள விளையாட்டுப்போட்டிகள் முக்கிய பங்கி வகிக்கிறது.
மேலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் ஒவ்வொருவருக்கும் அரசுப்பணி, அரசுக்கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தேசிய, மாநில உலகளவில் சிறந்து விளங்க வேண்டும். எனவே நாம் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் சிறந்து விளக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இவ்விழாவில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ராஜேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் எம்.மேரி பிரின்ஸி லதா, திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சரவணன், ஊராட்சிமன்ற தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் விஜிலா ஜஸ்டஸ், கலா ராணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சோமு, சதீஷ், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.