» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயற்கை ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு கிரீன் சாம்பியன் விருது: மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!

வியாழன் 5, செப்டம்பர் 2024 10:31:42 AM (IST)



தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது பெற்றுள்ள இயற்கை ஆர்வலர் எம்.ஏ.தாமோதரன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

ஆண்டு தோறும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயல்படும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனி நபர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவானது தேர்ந்தெடுத்து, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும். சுற்றுச்சூழல் விருதுக்கு  விண்ணப்பித்து அதில் தேர்வானவர்களை  கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு "கிரீன் சாம்பியன் விருதும்" சான்றிதழும், ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். 

இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான எம்.ஏ.தாமோதரனுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர் எம்.ஏ. தாமோதரன் தமிழ்நாடு  முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில்  பசுமை குறுங்காடுகளையும், பசுமை குறும்பூங்காவனங்களையும் உருவாக்கி நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த சிறப்பாக சேவையாற்றியுள்ளார். 

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் 16 லட்சத்துக்கும் மேலான பனைவிதைகளை நடவு செய்து, தமிழகத்தின் தேசிய மரமான பனைமரங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் சிறப்பாக  பணியாற்றியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். 

இவர் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மூலமாக பசுமை பாதுகாவலன், பசுமை தோழன்,  பசுமை நாயகன், பசுமை செந்துளிர் என பல விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசின் சுற்றுச் சூழலுக்கான உயரிய விருதான "கிரீன் சாம்பியன் விருது" பெற்றுள்ள எம்.ஏ. தாமோதரன் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றார். வாழ்த்துக்களை பெற்ற பெற்ற கிரீன் சாம்பியன் எம்.ஏ.தாமோதரன் மேயருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 5, 2024 - 10:56:40 AM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory