» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: ஒருவர் கைது
வியாழன் 5, செப்டம்பர் 2024 8:28:35 AM (IST)
கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்குத் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் மகேந்திரன் (42). முன்னாள் ராணுவ வீரரான இவர், கருத்து வேறுபாட்டால் கடந்த 17 ஆண்டுகளாக மனைவி, 2 குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம். அவர் சம்பவத்தன்று இரவு கோவில்பட்டி லக்குமி ஆலை மேம்பாலம் அருகேயுள்ள மதுக் கூடத்தில் மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதிகாலை மாடியிலிருந்து கீழே வந்து குடும்பத்தினரிடம் தண்ணீர் கேட்டாராம். தண்ணீர் குடித்தபின் வாந்தியெடுத்த அவர், வயிறு வலிப்பதாகவும், மதுக் கூடத்தில் தன்னை 4 பேர் தாக்கியதாகவும் கூறினாராம்.அதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், அவரை தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவ ர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, அவரைத் தாக்கிய நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கூலித் தொழிலாளியான லட்சுமணன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.