» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணப்பாடு திருச்சிலுவை திருத்தல மகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வியாழன் 5, செப்டம்பர் 2024 8:20:23 AM (IST)
மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலத்தில் 445-ஆவது மகிமைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலத்தில் 445-ஆவது மகிமைப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி நேற்று காலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து ஐந்து திருக்காய சபையினரின் கொடி பவனி, திருத்தலத்தில் திருப்பலி, திருச்சிலுவை ஆசீரைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தலைமை வகித்து மறையுரை வழங்கினார். இதில் மணப்பாடு மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
விழா நாள்களில் தினமும் திருத்தலம், பங்கு ஆலயத்தில் திருப்பலி, திருயாத்திரைத் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை, விவிலிய விநாடி வினா போட்டி ஆகியன நடைபெறும். திருப்பலி நிகழ்ச்சிகளில் பல்வேறு சபையினர், பாடகர் குழுவினர் பங்கேற்பர்.
விழாவின் சிகர நிகழ்வாக செப்.13-ஆம் தேதி காலை மணப்பாடு மக்கள்,திருப்பயணியர் பங்கேற்பில் பங்கு ஆலயம், திருத்தலம் மற்றும் திருயாத்திரை திருப்பலிகள் நடைபெறும். மணப்பாடு மறை வட்ட அதிபர் பென்சிகர் தலைமை வகிக்கிறார். மாலையில் மலையாளத்தில் திருப்பலியைத் தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணிக்கு வரவேற்பு, இரவு 7 மணிக்கு பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறும். இதில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பர்.