» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி- மாலத்தீவு கப்பல் போக்குவரத்து: அக்டோபர் 1 முதல் தொடங்குகிறது!

புதன் 4, செப்டம்பர் 2024 8:26:37 AM (IST)



தூத்துக்குடி- மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து அக்டோபர் 1-ஆம் தேதி முதல்  தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர் காமராஜர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல் சேவை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் சேவையும் நடந்து வருகிறது.

இதுதவிர கடந்த மாதம் 16-ஆம் தேதியில் இருந்து சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம்- இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான நேரடி கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையானது இந்திய பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளும் மேற்கொண்ட இணைப்பு முயற்சிகளுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் என்கின்றனர்.

இதுகுறித்து கப்பல் போக்குவரத்தை தொடங்க இருக்கும் எச்வி. கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (HV Cargo Logistics) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கூறும்போது, ‘இந்தியா- மாலத்தீவு இடையே வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் தூத்துக்குடி- மாலத்தீவு இடையே அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

இதன்மூலம் வாராந்திர அடிப்படையில் செலவு குறைந்த மற்றும் விரைவான சேவை வழங்கப்படுகிறது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து இதில் அடங்கும். இந்த புதிய சேவை செலவு குறைந்த போக்குவரத்தாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை முதல் கட்டமாக 7 மாதங்கள் இந்த சேவை நடக்க இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு 500 கடல் நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் இந்த தூரத்தை கடக்க 2½ நாட்கள் வரை ஆகும்.

குறிப்பாக மாலத்தீவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் இந்த சேவை உதவிகரமாக இருக்கும். கட்டுமானத்திற்கு தேவைப்படும் பொக்லைன் எந்திரங்கள், கிரேன்கள், தொட்டிகள், லாரிகள், திடப் பொருட்கள், எந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பெரிய மற்றும் கனரக பொருட்கள், இவற்றுடன் உணவு பொருட்களான காய்கறி, முட்டை, மளிகை பொருட்களையும் குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும்.

இந்த முயற்சியானது தளவாட மற்றும் பிற செலவுகளை குறைக்கும், இணைப்பை மேம்படுத்தும் மற்றும் இந்தியா-மாலத்தீவுகளுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான நேரத்தை குறைக்கும்.

நேரடி கப்பல் சேவை மூலம் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் கடல்சார் வர்த்தக தொடர்புகள் மேம்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் அருகில் உள்ள 1,500 தீவுகளுக்கும் நேரடியாக சென்று சரக்குகளை கையாளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.

தூத்துக்குடி மற்றும் மாலத்தீவு இடையே ஒரு சேவை முன்பு இந்திய கப்பல் கழகத்தால் இயக்கப்பட்டது. இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது வணிகங்கள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதை எளிதாக்குகிறது' என்றார்.


மக்கள் கருத்து

தேசபக்தன்Sep 4, 2024 - 09:10:09 AM | Posted IP 172.7*****

மாலத்தீவே இன்னொரு பாகிஸ்தான், வங்களம் மாதிரி இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது கவனம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory