» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு: சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட பெண் முடிவு!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 3:04:18 PM (IST)
சாத்தான்குளத்தில் பட்டா தராமல் இழுத்தடிப்பு செய்வதை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தினத்தில் பெண் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சோமசுந்தரி தனது வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த மனு குறித்து எந்தவித தகவலும் இல்லை. கடந்த 1-ம் தேதி திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மனு மீதான விசாரணைக்கு அவரது வீட்டிற்கு ஆய்விற்காக வந்து ஆய்வில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அதன் பின்னரும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து 5 மாத காலமாக பட்டா வழங்காமல் இருப்பதால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் வேறு வழியின்றி வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு இதற்கான அறிவிப்பை தபால் மற்றும் நேரிலும் வழங்கியுள்ளார். பெண் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.