» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் உலகத்தர அருங்காட்சியகம் : நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

சனி 5, ஆகஸ்ட் 2023 11:36:19 AM (IST)



ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் பணிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இங்கு தற்போது வரை பல்வேறு கட்டங்களாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் பண்டைய தமிழர்களின் வாழ்விடம், இடுகாடு ஆகியவை குறித்து தகவல்கள் கிடைத்தது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை தேடும் பணியும் திருக்கோளூர், அகரம் போன்ற பகுதியில் நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகம் உலகிற்கு தெரியவந்தது. இங்கு நடந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.



அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது.

இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி தொல்லியல்துறை மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் தலைமையில் பணி நடந்து வந்தது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கனிமொழி முன்னிலை வகித்தார். விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். 


மேலும் ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கிஷோர் குமார் பாசா, இணை இயக்குநர் எஸ்.கே.மஞ்சுல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்சி மண்டல தொல்லியல்துறை இயக்குநர் அருண்ராஜ், கண்காணிப்பாளர் காளிமுத்து, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ப்ரம்மசக்தி, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory