» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணியை பொருநை என பெயர் மாற்ற பரிசீலணை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி 3, டிசம்பர் 2022 10:48:02 AM (IST)

தாமிரபரணி ஆற்றின் பெயரை தமிழ் பெயரான பொருநை நதி என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 12 வாரத்தில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த பொன் காந்திமதி நாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. தாமிரம் என்பது வடமொழிச் சொல். முற்காலத்தில் இந்த ஆறு 'பொருநை நதி' எனும் தமிழ்ப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. 

திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல சங்க இலக்கியங்களில் தற்போதைய தாமிரபரணி ஆற்றினை பொருநை நதி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். பல்வேறு அகழாய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி என மீண்டும் மாற்றி அழைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, அரசியலமைப்பின்படி, நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்த வகையில் தாமிரபரணியை பொருநை என பெயர் மாற்றக்கோரி மனு அளித்தும் பலன் இல்லை. ஆனால் தொல்லியல் துறையினர், இந்த ஆற்றை தற்போது பல இடங்களில் பொருநை என குறிப்பிடுகின்றனர். தாமிரபரணியை அதிகாரப்பூர்வமாக பொருநை நதி என மாற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: "தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி" என பாரதியார் பாடியுள்ளார். இதேபோல, "பொருநையந் திருநதியின் இருகரையும் இருபூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே"-என்ற பாட்டின் மூலம் பூஞ்சாலி வகை நெல்லை இருபோகம் விளைவிக்க பொருநை நதி உதவியாக இருக்கிறது என தாமிரபரணியின் பெருமை பாடப்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமான பாடல்களில் தாமிரபரணியை பொருநை நதி என அழைத்துள்ளனர். 

அந்த வகையில் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சரும் அறிவித்து உள்ளார் என மனுதாரர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மனுதாரரின் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அரசு வக்கீல் தெரிவித்திருக்கிறார். அதன்படி தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை என மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Dec 3, 2022 - 12:13:43 PM | Posted IP 162.1*****

முதல்ல சாக்கடை கலக்காமல் கூவம் மாதிரி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதுவே போதுமானது .

AnbuDec 3, 2022 - 11:38:09 AM | Posted IP 162.1*****

உண்மை

அன்புDec 3, 2022 - 11:14:35 AM | Posted IP 162.1*****

பொருநை என்று மாற்றினால் என்ன தேனா ஓட போகுது. வேல இல்லாத மாமிய எதையோ செய்த மாதிரியில்ல இருக்கு. பேருல என்ன இருக்கு. பிரயோஜனமா எதையாவது கண்டுபிடிச்சி, சமுதாயத்துக்கு நல்லது பண்ணுங்க சார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory