» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.54.81 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்

புதன் 17, ஆகஸ்ட் 2022 5:08:47 PM (IST)



கேம்பலாபாத் ஊராட்சிக்குட்பட்ட திருக்களூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.54.81 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் கேம்பலாபாத் ஊராட்சி மன்ற வளாகத்தில் திருக்களூர் கிராமத்திற்கான மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமில் வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, கூட்டுறவுத் துறை, மாவட்ட தொழில் மையம், சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, முதன்மை கல்வி அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், வட்டார போக்குவரத்து அலுவலர், குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் திட்ட விளக்கவுரையாற்றினர்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: மக்கள் குறைதீர்க்கும் முகாம் கேம்பலாபாத் ஊராட்சியில் நடைபெறுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்ததால் கேம்பலாபாத் என்று பெயர் வந்தது என்பதை அறிந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உதவி செய்தவர்களை மக்கள் மனதார நினைப்பார்கள் என்று எனக்கு நினைவுக்கு வந்தது. கேம்பலாபாத் மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். கடுமையாக உழைப்பார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கி ஒரு ஊராக மாற்றி தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றிய மக்கள் கேம்பலாபாத் மக்கள். பேட்மாநகருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கி ஒரு ஊராக மாற்றியுள்ளனர். 

எனவே பேட்மாநகருக்கும் கேம்பலாபாத்துக்கும் தொடர்பு உள்ளது என்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் சோதனை செய்துள்ளார்கள். நடமாடும் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்களை தேடி மருத்துவம் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வாழை, பாரம்பரிய நெல் வைத்துள்ளார்கள். ஆடு, மாடு போன்றவைகளுக்கு தடுப்பூசி கொடுத்துள்ளார்கள். 

கன்று பராமரிப்பு பெட்டகம் வாங்கி பயன்பெறலாம். மேலும் கோழிப் பண்ணை மற்றும் கோழி வளர்ப்பவர்கள் மானிய விலையில் குஞ்சு பொறிப்பான் இயந்திரம் வாங்கி பயனடையலாம். பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது. வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக சாலை பொதுமொழிகள் என்ற கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இக்கையேடினை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வழங்க உள்ளோம்.

கேம்பலாபாத் கிராம ஊராட்சியில் இன்றைய தினம் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுவதற்கு கடந்த 6.7.2022 அன்று முன்னோடியாக மனுக்கள் பெறப்பட்டன. அன்றைய தினத்தில் மொத்தம் 141 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 103 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு அதற்குரிய நலத்திட்ட உதவிகள் இன்றைய தினத்தில் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள 38 மனுக்கள் தீர்வு காணும் பொருட்டு பரிசீலனையில் உள்ளன.

முன்னோடி மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தவிர்த்து அதற்கு பின்னர் இந்த திருக்களூர் கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலுள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), கூட்டுறவுத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, மக்களை தேடி மருத்துவம் ஆகிய துறைகளின் கீழ் 114 பயனாளிகளுக்கு இன்றைய தினம் ரூ.54.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் சார்பாக அமைக்கபட்டிருந்த அரங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, இணை இயக்குநர் வேளாண்மை முகைதீன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்செல்வன், ஏரல்; வட்டாட்சியர் கண்ணன், கேம்பலாபாத் ஊராட்சி மன்ற தலைவர் சபிதாசர்மிளா, துணைத்தலைவர் காஜா உதுமான், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory