» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்கப்படும் : ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தகவல்

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:36:43 PM (IST)



பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி அடுத்த ஆண்டிற்குள் முன் மாதிரி ஊராட்சியாக உருவாக்கப்படும் கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி கோட்டை கலையரங்கத்தில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சிறப்பு விருந்தினராக இன்று கலந்துகொண்டார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: நாங்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தால் பாஞ்சாலங்குறிச்சிக்கு பெருமை அல்ல. எங்களுக்குத்தான் பெருமை. இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஏதாவது ஒரு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலர் கருத்துருக்கள் அனுப்பியுள்ளார்கள். குறிப்பாக பாஞ்சாலங்குறிச்சியை தேர்ந்தெடுத்து நான் வந்துள்ளேன். அதற்கு மிக மிக முக்கிய காரணம் முதன்முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன். எனவே பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திற்கு வந்துவிட்டேன். 

ஊமைத்துரை, சுந்தரலிங்கம் வரலாற்றையும் படித்திருக்கிறோம். பெண்கள் ஆண்களைவிட அதிக வீரமாக உள்ளார்கள். 1992க்கு பிறகு உள்ளாட்சிகளில் கிராமசபை நடக்கிறது. பஞ்சாயத்துகளில் என்ன வேண்டும் என்று அனைவரும் கலந்து உட்கார்ந்து முடிவு செய்யக்கூடிய கூட்டம்தான் கிராமசபை கூட்டம். முதலமைச்சர் விரும்பிய கிராம சபை கூட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடக்கிறது.

கிராமசபை கூட்டத்தில் பட்டா, பொதுப்பாதை, பண்ணைகுட்டை, கழிப்பறை, இலவச வீடு, குடிநீர் வசதி, மின்விளக்கு, நூலகம், கணிணி மையம், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2022-2023ல் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி வரவிருக்கிறது. பஞ்சாயத்துக்கு கட்டிடம் கட்டாயமாக வேண்டும். இந்த வருடம் கண்டிப்பாக கட்டித்தரப்படும். 

இரண்டாவதாக நியாய விலைக் கடையும் கட்டிதரப்படும். மூன்றாவதாக வீரபாண்டிய கட்டப்பொம்மன் கோட்டை சுற்றுலா தலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு கட்டப்பொம்மனின் வாழ்க்கை வரலாற்றினை ஒலி-ஒளி காட்சிப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வருட காலத்திற்குள் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும். மேலும் சக்கம்மாள் கோயில் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி தங்கு தடையின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இந்திராகாலனி குடியிருப்பில் உள்ள 200 வீடுகளுக்கு பட்டா வழங்க ஆய்வு மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்கப்படும். சமுதாய நலக்கூடமும் ஒரு வருட காலத்திற்குள் கட்டித்தரப்படும். இளைஞர்களுக்கு மைதானம், நூலக வசதி, கணினி மையம், ஏற்படுத்தி தரப்படும். விரைவில் சாலை வசதி ஏற்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தெரு விளக்கு உடனடியாக சரி செய்யப்படும். மாற்றுத்திறனாளி கணேசமூர்த்தி அவர்களின் கோரிக்கையான மோட்டார் பொருத்திய இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

தமிழக அளவில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சி மாடல் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் நட்டாத்தி ஊராட்சி தலைவருக்கு ரூ.10 இலட்சம் பரிசு வழங்கியுள்ளார்கள். அதேபோல் அடுத்த வருடம் பாஞ்சாலங்கறிச்சி ஊராட்சி தமிழக அளவில் மாடல் பஞ்சாயத்தாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உங்கள் ஒத்துழைப்பு தேவை. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பேசினார்.

அதனைத்தொடர்ந்து 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், வேளாண்மை துறை சார்பாக முதலமைச்சர் அவர்களின் மானாவாரி திட்டத்தின்கீழ் இடுபொருள்கள் 3 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வழங்கினார். இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவி யோகராஜ், வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் வாரிசுதாரர் வீமராஜா ஜெகவீர பாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory