» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலில் சாட்டிலைட் போன் பறிமுதல்

வியாழன் 30, ஜூன் 2022 8:39:43 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது. அந்த வகையில் சாட்டிலைட் போன்களை எளிதில் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் துரையா சாட்டிலைட் போன்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது. அதே நேரத்தில் இந்த போன்களை மற்ற நாடுகளில் பயன்படுத்துவதற்கு தடை இல்லை என்பதால் கப்பல்களில் மாலுமிகள் அவற்றை வைத்திருப்பது வழக்கமாக உள்ளது. 

ஆனால், இந்திய எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அதனை மீறி பயன்படுத்தும்போது அவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 'ஓஜாஸ் பிரைடு' என்ற கப்பல் கடந்த 27-ந் தேதி வந்தது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேர், இந்தியாவை சேர்ந்த 6 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 10 மாலுமிகள் இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து கற்களை மாலத்தீவுக்கு ஏற்றி செல்வதற்காக வந்திருந்த அந்த கப்பல் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கப்பலில் உள்ள ஒரு என்ஜினில் பழுது ஏற்பட்டதால் கப்பல் கேப்டன், கப்பலின் உரிமையாளர் மற்றும் முகவரை தொடர்பு கொள்வதற்காக துரையா சாட்டிலைட் போனை பயன்படுத்தி உள்ளார். அதை பயன்படுத்தியதன் சிக்னல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தில் பதிவானது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் உடனடியாக தூத்துக்குடி கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து நேற்று இரவு கடலோர காவல் படையினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் புறப்பட்டு, நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த அந்த கப்பலுக்கு சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory