» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண உதவி தொகை திட்டத்திற்கு ரூ.762 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

வியாழன் 13, ஜனவரி 2022 8:55:18 PM (IST)

தமிழகத்தில் 3 லட்சத்து 34 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்க ரூ.762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பெண்கள் மறுமண உதவித் திட்டம், விதவை தாய்மார்களின் மகள்கள் திருமண உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், கலப்பு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு முதல் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 பெண்களுக்கு நிதியுதவி வழங்காமல் நிலுவையில் வைத்து இருந்தனர்.

இந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்க தமிழக முதல்-அமைச்சர் ரூ.762 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, நிதியுதவி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நிதியுதவி வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நிதியுதவி வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.23 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் பிளஸ்-2 வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். தாலிக்கு தங்கம் மட்டும் நேரடியாக வழங்கப்படும்.

கரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த 7 ஆயிரத்து 513 குழந்தைகளுக்கும், 2 பெற்றோரையும் இழந்த 287 குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 2 பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் பராமரிப்பு தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory