» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணியின் 7வது அணைக்கட்டு நிரம்பி வழிகிறது : கலியாவூர் குளம் உடையும் அபாயம்

சனி 27, நவம்பர் 2021 4:40:15 PM (IST)



தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. 

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் இருந்தும் தண்ணீர் தாமிரபரணியில் வந்து சேருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்கையில் உள்ள தாமிரபரணியின் மிக நீளமான தடுப்பு அணையான மருதூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் மருதூர் அணையை தாண்டி விழுகிறது. இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாகும். ஆனாலும் தண்ணீரின் ஆபத்து தெரியாமல் பலர் இங்கு குளித்து வருகின்றனர்.

கலியாவூர் குளம் உடையும் அபாயம்

ஸ்ரீவைகுண்டம் தாலூகா கலியாவூர் பெரியகுளம் மிகவும் விசேஷமான குளமாகும். நெல்லை மாவட்டத்தில் இருந்து வரும் காட்டாற்று தண்ணீர் அனைத்தும் சீவலப்பேரிக்கும் மருகால் தலைக்கும் இடையே சாலையை கடந்து தாமிரபரணி ஆற்றுக்குள் வருகிறது. தண்ணீர் வேகம் அதிகரித்து வருவதால் இந்த பகுதியில் வாகனங்கள் வரஇயலாமல் தடைப்பட்டுவிட்டது. இதனால் கலியாவூர் உள்பட சுற்று பகுதியில் உள்ள மக்கள் திருநெல்வேலிக்கு வர வல்லநாடு சுற்றித்தான் வரவேண்டியது உள்ளது. கலியாவூர் குளம் நிரம்பி இருப்பதால், அது உடையாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சடையநேரி கால்வாய் திறந்துள்ளது.

சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் தரும் தலை மடையான கால்வாய் குளம் நிரம்பியுள்ளது. எனவே சடையனேரிக்கு மதகை திறந்து வைத்துள்ளனர். இதனால் மதகு வழியாக சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனாலும் கூடுதல் கவனம் செலுத்தி கால்வாய் குளத்தின் கரையை உயர்த்தி வடிகாலை மேம்படுத்தினால் சடையனேரி கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் எடுக்கலாம். சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல 25 கோடிக்கு மேல் கடந்த 30 ஆண்டுகளில் தமிழக அரசு பணம் செலவழித்து உள்ளது. ஆனாலும் கால்வாய் குளத்தினை தூர் வாரி, கரைகளை உயர்த்தினால் மட்டுமே இந்த திட்டம் முழுமை பெறும்.

கால்வாய் குளம் மறு கால் பாய்கிறது.

மருதூர் மேலக்காலில் மிக முக்கிய குளம் கால்வாய் குளம். சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீர் தரும் இந்தகுளத்தில் இருந்து தான் சடையனேரி கால்வாய் வழியாக புத்தன் தருவைக்கு தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். ஆனால் தண்ணீர் சடையனேரி கால்வாயை தாண்டும் முன்பே கால்வாய் குளம் மறுகால் பாய்ந்து விட்டது. சடைனேரி கால்வாய் மதகு அருகிலேயே இந்த மறுகால் உள்ள காரணத்தினால் சடையனேரிக்கு செல்லும் தண்ணீரை விட மறுகால் செல்லும் தண்ணீர் அதிகமாக செல்கிறது. எனவே வருங்காலத்தில் கால்வாய் குளத்தினை தூர்வாரி , கரைகளை பலப்படுத்தும் பணியை அரசு செய்ய வேண்டும். அப்போது தான் சடையனேரி கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் திறக்க முடியும்.

அப்பன் குளம் உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் உள்ள கால்வாய் குளத்தின் கடை மடை பகுதியில் அப்பன் குளம் உள்ளது. தற்போது இந்த அப்பன் குளம் உடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் ஆதாழி குளம் வயற்காட்டுக்குள் புகுந்து வெள்ளூர் குளம் வழியாக தாமிரபரணி ஆற்றில் மீண்டும் கலந்து விட்டது.

திருவரங்கப்பட்டி குளம் மறுகால் பாய்ந்தது

கால்வாய் பஞ்சாயத்து திருவரங்கப்பட்டி குளம், மணிமுத்தாறு பாசனம் மூன்றாவது ரீச்சில் உள்ள திருவரங்கப்பட்டி குளத்தில் தண்ணீர் பெருகினால், கிணற்றுதண்ணீர் பெருகும் நிலை ஏற்படும். தூத்துக்குடி மாவட்டத்திலேயே காய்கறிகளை மிக அதிகமாக விளைய வைக்கும் கிராமங்களில் திருவரங்கப்பட்டியும் ஒன்று. எனவே இவர்கள் கிணற்றுதண்ணீர் இல்லாத காலத்தில் போர் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது திருவரங்கப்பட்டி குளம் நிறைந்து, மறுகால் விழுந்த காரணத்தினால் நிலத்தடி நீரும் உயர்ந்து விட்டது. இதனால் திருவரங்கப்பட்டி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



ஊருக்குள் புகுந்த வெள்ளம் வற்றியது.

நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கருங்குளம் பஞ்சாயத்து திருவரங்கப்பட்டி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்த மழை பெய்த காரணத்தினால் ஊருக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருந்தது. இன்று காலை மழை பெய்வது குறைந்து வெயில் அடித்தது. எனவே வெள்ளம் வற்றி கொண்டே வந்தது. அன்றாட வாழ்க்கை பாதிப்பில் இருந்து திருவரங்கப்பட்டி மக்கள் மீண்டனர். ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை உள்ளது என வானிலை அறிக்கை வெளிவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory