» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவு

வெள்ளி 26, நவம்பர் 2021 9:47:51 AM (IST)தென் தமிழகத்தில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திடீரென கொட்டித் தீா்த்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீா் அதிகளவு தேங்கியதால் பயணிகள் நடமாட முடியாமல் தவித்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, ரயில் நிலையம், திரேஸ்புரம் மலா் அரங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, பிரையன்ட்நகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், சிதம்பரநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீா் காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.

கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அரசு அலுவலக வளாகத்தில் மழைநீா் குளம் போல் காட்சியளித்தது. மேலும் மந்தித்தோப்பு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி - இளையரசனேந்தல் சுரங்கப்பாதை, வேலாயுதபுரத்தையடுத்த இலுப்பையூரணி சுரங்கப்பாதையிலும் மழைநீா் தேங்கியதையடுத்து, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் 1ஆவது மேட்டு தெரு பகுதியில் காசி மனைவி முத்துகனியின் ஓட்டு வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதேபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புங்கவா்நத்தம் நிறைகுளத்து அய்யனாா் கோயில் கண்மாய் நிரம்பி ஊருக்குள் புகுந்தது. இதுபோல் திருச்செந்தூா், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வரை மழை தொடா்ந்ததால் சாலைகளில் தண்ணீா் வெள்ளம்போல ஓடியது.

தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவாகும். அதேபோல், தூத்துக்குடியில், 26.6 சென்டிமீட்டரும், திருச்செந்தூரில் 24 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.

மழை அளவு விபரம் 

இந்நிலையில், இன்று (26.11.2021) காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம் வருமாறு 

1. திருச்செந்தூர் : 248

2. காயல்பட்டினம் : 306

3. குலசேகரப்பட்டினம் : 158

4. விளாத்திகுளம் : 41

5. காடல்குடி : 52

6. வைப்பார் : 149

7. சூரங்குடி : 56

8. கோவில்பட்டி : 71

9. கழுகுமலை : 36

10. கயத்தார் : 58

11. கடம்பூர் : 90

12. ஓட்டப்பிடாரம் : 121

13. மணியாச்சி : 87

14. வேதநாதம் : 80

15. கீழஅரசடி : 59

16. எட்டயபுரம் : 78.9

17. சாத்தான்குளம் : 121

18. ஸ்ரீவைகுண்டம் : 179

19. தூத்துக்குடி : 266.60

மொத்தம் : 2257.50

சராசரி : 118.82


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory