» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரை பார்வையிட கல்லூரி மாணவர்கள் ஆர்வம்!

வியாழன் 25, நவம்பர் 2021 11:11:04 AM (IST)உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். 

உலக பாரம்பரிய வாரவிழா நவம்பர் 19ம் முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ஆதிச்சநல்லூருக்கு பல்வேறு இடங்களிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் வந்து பார்வையிட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 20 ந்தேதி சிவகளை தொல்லியல் கழகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் 200க்கு மேற்பட்ட ஆசிரிய ஆசிரியர்கள் ஆதிச்சநல்லூர் வந்து பார்வையிட்டனர். 

கடந்த 23ந்தேதி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்று மாணவர் மாணவிகள் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். 24 ந்தேதி தென்காசி மாவட்ட தொல்லியல் அதிகாரி ஹரி கோபாலகிருஷ்ணன், மனோன்மணீயம் பல்கலைக்கழகம் தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். இவர்கள் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தினை பார்வையிட்டனர். 

இந்த பயணத்தில் தமிழ்த்துறை, வரலாற்றுத் துறை, உயர் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், சங்ககால வாழ் விடப்பகுதிகள், ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவான சுண்ணாம்பு தளம் போன்றவற்றைப் பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆய்வாளர் முத்துக்குமார் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தார். அவர்களுடன் பேராசிரியர்கள் சபரி, நாகராஜ், நாராயணன், வாசுகி, சென்ராயபெருமாள், ராமசுப்பிரமணியன் உள்படப் பலர் வந்தனர்.

கடந்த இரண்டு வருடங்கள் மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்தது. அப்போது கொரோனா தடுப்பு காரணமாகக் கல்லூரி மூடியிருந்தது. எனவே ஆதிச்சநல்லூரைப் பார்வையிடக் கல்லூரி மாணவ மாணவிகள் வர இயலவில்லை. தற்போது மழைக் காலமாக இருந்தாலும்டெண்ட் அமைத்து அகழாய்வை மத்திய அரசு சார்பில் நடத்தி வருகிறார்கள். எனவே உலக பாரம்பரியம் நாளை முன்னிட்டு ஆதிச்சநல்லூரை நோக்கி மாணவ மாணவிகள் மொத்தமாகப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மாணவ மாணவிகள் காட்டும் ஆர்வம் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்படத் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஆதிச்சநல்லூர் அகழாய்வினை பார்வையிட வருகை தர உள்ளனர். இவர்களுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிகளை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ் ஏற்பாடு செய்துள்ளார். இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory