» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.1ம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி

திங்கள் 11, அக்டோபர் 2021 4:16:57 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.1ம் தேதி பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். 

மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள் மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1200 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் சுய உதவி குழுக்கள் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரி பார்த்து அதன்படி தடுப்பூசி போடாதவர்கள் கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி தடுப்பூசி போடப்பட்டது.

பல இடங்களில் மொபைல் சேவை மூலமாக தடுப்பூசி போடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் தூத்துக்குடி மாவட்டம் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான 14 லட்சம் பேரில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 60% ஆகும். 3லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 25% ஆகும்.

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் உள்ள உரிமையாளர் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டு அவரது கடைகள் முன்பு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளோம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது அந்த கடையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் தொற்று பரவல் என்பது 0.5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. 

மாவட்டத்தில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளது.  வரும் நவம்பர் 1ஆம் தேதி ஆறாவது முதல் எட்டாவது வரையிலான மாணவ மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பல நாட்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் பள்ளிகளின் கட்டிட வலிமை மற்றும் உறுதித்தன்மை குறித்து சோதனை நடதத் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி பள்ளி திறக்கும் போது அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

முன்னதாக தூத்துக்குடி மேற்கு பி&டி காலனியை சார்ந்த பி.தெய்வானை என்பவர் ஆதரவற்ற விதவையின் அடிப்படையில் வேலை வேண்டி விண்ணப்பம் அளித்ததின் பேரில், மாவட்ட ஆட்சியர் அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சிப்காட் தொழிற்சாலையில் புல உதவியாளாராக தற்காலிக பணி நியமன ஆணையினையும், மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முதல் வீடுகட்டும் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory