» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய திடீர் தடை : பக்தர்கள் சாலை மறியல் - பரபரப்பு

ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:55:35 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் 2-ம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதால், கோவில் கடற்கரை, நாழிக்கிணறு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருந்தது. வார விடுமுறை நாட்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரையிலும், வருகிற 8-ந்தேதியும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரும்பாலானவர்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், பல்வேறு வாகனங்களிலும் கோவிலுக்கு வந்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பக்தர்களை அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் உள்ள மெயின் ஆர்ச் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பக்தர்கள், கோபுரத்தை தரிசனம் செய்வதற்காக மட்டுமேனும் அனுமதிக்குமாறு கூறினர். இதற்கு போலீசார் அனுமதிக்காததால், பக்தர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதையடுத்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சில பக்தர்கள், கோவில் டோல்கேட் அருகில் நின்று கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சென்றனர். 
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது. கோவிலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

 இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் 

குலசேகரன்பட்டினம் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். தென் மண்டல செயலாளர் தனலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன், திருச்செந்தூர் நிர்வாகிகள் தங்கராஜா, பால்ராஜ், இசக்கிமுத்து, உடன்குடி ஒன்றிய தலைவர் குணசேகரன், பாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலர் ரவிகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து

kumarAug 2, 2021 - 01:32:07 PM | Posted IP 162.1*****

kovilgaluku mattum intha thadai vithithirupathu migavum varuthamaga ullathu? arasu kovilgalai thiranthu bakthargalai thaguntha pathukappu nerimuraigalodu tharisanathuku anumathikkavendum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory