» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை : எஸ்பி ஜெயக்குமார் உறுதி!

வெள்ளி 30, ஜூலை 2021 3:33:57 PM (IST)தூத்துக்குடியில் மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 30 ம் தேதி மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (30.07.2021) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றம் மற்றும் சைல்டு லைன் 1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்பி பேசுகையில், குழந்தைகள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இன்று மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித கடத்தல் என்பது பணம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் பல வகைகளில் நடக்கிறது. பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது. குழந்தைகளை கடத்தி குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றிற்காகவும் கடத்தல் நடக்கிறது. இந்த கடத்தல் தடுக்கப்பட வேண்டும், ஒவ்வொருவருக்கும் தனிமனித உரிமைகள் உண்டு. 

அவை நசுக்கப்படவோ தடுக்கப்படவோ கூடாது. குழந்தைகளுக்கெதிரான எந்த குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாக சைல்டு லைன் 1098 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதே போன்று பெண்களுக்கெதிரான குற்ற தடுப்புக்காக 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அந்த பிரச்சனையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கோட்டங்களில் 7 அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு ஆய்வாளர் தலைமையில் 20 பெண் போலீசார் செயல்படுகின்றனர். 

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான எந்த குற்றங்கள் நடைபெற்றாலும் அதை உடனடியாக விசாரித்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் செல்போன் மற்றும் இதர சமூக வலைதளங்கள் மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக நிகழும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் அலுவலகத்தில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையம் இயங்கி வருகிறது. நகர்ப்புறம் போன்றே கிராம புறங்களிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும், 

இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அதை தடுக்க முடியும், அதிலும் குழந்தைகளுக்காகவே போக்சோ போன்ற சிறப்பு சட்டங்கள் உள்ளது. அதன்மூலம் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை வரை கிடைக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன்-1098 தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமையிலான உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி கோபி, டவுண் டிஎஸ்பி கணேஷ், பயிற்சி டிஎஸ்பி சஞ்சீவ் குமார், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் தாம்ஸன் தேவசகாயம், தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ், தூத்துக்குடி நகர்ப்புற ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னான்டோ, தூத்துக்குடி சைல்டு லைன்-1098 குழு உறுப்பினர் செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory