» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் : மத்திய தொல்லியல் இயக்குனர் தகவல்

வியாழன் 29, ஜூலை 2021 4:00:25 PM (IST)



ஐரோப்பாவில் அமைந்துள்ளது போல உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ளது என மத்திய தொல்லியல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூருக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழககு தீர்ப்பின் படி படிப்படியாக ஆதிச்சநல்லூரில் பணி மும்முரமாக நடந்துவருகிறது. 2020 மத்திய பட்ஜெட்டில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நிதி ஒதுக்கீடு செய்தார். மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் படி புதிதாக திருச்சியில் தொல்லியல் துறைக்கு மண்டல அலுவலகம் திறககப்பட்டது. அதற்கு முதல் கண்காணிப்பாளராக அருண்ராஜ் பதவி யேற்றார்.

அவர் பதவியேற்ற பிறகு ஆதிச்சநல்லூர் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இவர் கடந்த டிசம்பர் 11 ந்தேதி ஆதிச்சநல்லூர் வந்து புதிய உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்தார். அந்த இடங்களை ஆய்வுக்கு எடுத்துகொண்டனர். தொடர்ந்து ஆய்வு செய்ய கடந்த டிசம்பர் 26 ந்தேதி மீண்டும் ஆதிச்சநல்லூருக்கு இவர் தலைமையில் குழு வந்தது.  ஏற்கனவே தேர்வு செய்த இடங்களை பார்வையிட்டனர். அதன் பின் 2004ல் அகழாய்வு நடந்த இடம், மற்றும் ஆதிச்சநல்லூரில் பாறை கிண்ணங்கள் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். அருங்காட்சியகம் அமையும் இடம் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணனோடு கலந்து ஆலோசித்தார்.

அதன் பின் ட்ரோவுன் காமரா மூலம் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் தற்காலிகமாக மியூசியம் அமைக்கும் பணியை முடுக்கி விட்டார். ஆதிச்சநல்லூரில் மிக பிரமாண்டமாக விளம்பர பலகை மூன்று அமைககப்பட்டது. சுற்றுலா துறையுடன் ஆலோசனை நடத்தியதில் பேரில் சாலைகளில் ஆதிச்சநல்லூர் செல்லும் வழிகள் குறித்து விளம்பர பலகை வைககப்பட்டது. மிக வேகமாக பணிகள் நடந்த காரணத்தினால் தொல்லியல் ஆர்வலர்கள் மிகவும் சந்தோஷமடைந்தனர்.

இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த பணிகள் முடங்கியது. இதனால் பணிகள் தொய்வு பெற்றது. ஆயினும் மாநில அரசு சார்பாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வு நடந்தது. கடந்த பிப்பரவரி 26 ல் தொடங்கிய இந்த பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடங்களை கண்டு பிடித்தது, சிவகளை அருகே உள்ள மூலக்கரையில் கல்வட்டம் கண்டுபிடித்தது, கொற்கையில் சங்கறுக்கும் தொழில் சாலை கண்டுபிடிக்கப்பட்டது உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இதனால் தொல்லியல் மூலம் தமிழக வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்பு கோலோட்சியது தெரிய வந்தது. மேலும் கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூர் சிவகளையில் மாநில அரசு செய்த ஆய்வின் அறிக்கை வரும் போது தமிழரின் பண்பாடு பல ஆயிரம் ஆண்டு முன்பே உச்சத்தில் இருந்தது தெரியவரும் என ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் மகேஸ்வரி தலைமையில் மத்திய தொல்லியல் குழுவினர் கடந்த 18 ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் பணி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார். அவர் கொற்கை, சிவகளை பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார். அதன் பின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையும் இடத்தினை பார்வையிட்டார். ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகம் உலக தரவாய்ந்த அருங்காட்சியமாக அமையும். இதை சைட் மியுசியம் என்று கூறுவர் . ஐரோப்பாவில் அமைந்த மியூசியம் போலவே அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடும் வண்ணம் வடிவமைக்கப்படும். மேலும் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருள்களையும் இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஆவண செய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல்  ஜெர்மன் நாட்டு பெர்லின் நகரில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டெடுத்து அதையையும் ஆதிச்சநல்லூரில் உள்ள அருங்காட்சியகத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்தினை என்னுடைய உயர் அதிகாரிகள் பார்வையிட்டு சீர்செய்தவுடன் அருங்காட்சியகம் பணி மத்திய அரசின் ஒப்புதலுடன் துவங்கும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று 28.07.2021 டெல்லி தொல்லியல் துறை இயக்குனர் அஜய் யாதவ், டெல்லி இணை இயக்குனர் சஞ்சை குமார் மஞ்சில்,  மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ், பயிற்சி உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கொண்ட குழுவினர் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் இடங்களை  அடையாளம் காட்டினர்.

உயர் அதிகாரிகள் ஆதிச்சநல்லூரில் தற்காலிக அருங்காட்சியகம் அமைய உள்ள மண்டபத்தினை பார்வையிட்டார். அதன் பின் நடந்து சென்றே ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிக்குள் வந்தனர் . அங்கு ஐரோப்பிய தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டனர். அதன் பின் புளியங்குளம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க கூடிய மூன்றரை ஏக்கர் இடத்தினை பார்வையிட்டு, இடம் தேர்வு செய்தனர். அதன் பின் புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையத்தில் மாநில அரசு மூலமாக வைக்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் பொருள்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் விளக்கினார். அதன் பின்  சைட் மியூசியம் அமைக்கும் இடம் குறித்து கலந்துரையாடல் நடந்தது.

அப்போது உதவி கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன், திருச்சி பராமரிப்பு அலுவலர் சங்கர், நாகர் கோயில் பராமரிப்பாளர் சுரேஷ் பாபு, திருமயம் பராமரிப்பாளர் விக்னேஷ், ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், அரவாழி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கிய மேரி, கிராம நிர்வாக அதிகாரிகள் ஆதிச்சநல்லூர் லூர்து பிரான்ஸ், கருங்குளம் மணி மாலா,  முத்தாலங்குறிச்சி கந்தசுப்பு உள்பட பலர் உடனிருந்தனர். ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக மத்திய தொல்லியல் துறை தொடர்ந்து ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Jvm.Jul 29, 2021 - 05:06:56 PM | Posted IP 162.1*****

தாமத பதிவு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory