» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : கண்காணிப்பு அலுவலர்

வியாழன் 29, ஜூலை 2021 8:27:39 AM (IST)தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் அறிவுறுத்தினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன்,  மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கொரோனா டெஸ்ட் சாம்பிள் மாதிரிகள் எடுப்பது மற்றும் வீடு வீடாக பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது, கொரோனா தடுப்பூசிகளை அதிக மக்களை சந்திக்கும் நபர்களுக்கு போடுதல், மேலும் 3வது அலையை சமாளிக்கும் வகையில் கவனமாக இருத்தல், கொரோனா பாதுகாப்பு மையங்களை தயார் செய்து வைத்தல், தேவையான மருந்து, மாத்திரைகளை தலைமையிடத்தில் இருந்து பெற்று வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் தடுப்பணை கட்டும் பணிகள், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகள், பொதுப்பணித்துறையின் மூலம் திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் பணிகள், ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள், மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகளில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் தினசரி சாம்பிள் டெஸ்ட் எடுப்பதை தொடர்ந்து 3000 ஆகவே இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை குறிப்பாக மக்களை அதிகமாக சந்திக்க உள்ள ஓட்டல் பணியாளர்கள், மார்கெட் ஊழியர்கள், ரேசன் கடையில் பணியாற்றுபவர்கள், பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர்கள், போக்குவரத்து காவலர்கள், அதிக மக்கள் வருகை தரும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். 3வது அலையை எதிர்கொள்ள கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நகர்ப்புறத்தில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி பகுதியில் கொரோனா கள பணியாளர்களை அதிகமாக நியமித்து 2 தினங்களுக்கு ஒருமுறை வீடு வீடாக சென்று காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் லிக்யுடு ஆக்சிஜன் டேங்க் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா சிம்டம்ஸ் உள்ளோருக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு பெற்று இருப்பில் வைக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு மையங்களை தயாராக வைக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தடுப்பணை கட்டும் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் யாத்திரை நிவாஸ் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி பாதாள சாக்கடை பணிகளை தினசரி ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் 248 குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் மற்றும் பல்வேறு பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

ஊரக வளர்ச்சி முகமை ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்களது துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை தினசரி ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழைநார் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), கோகிலா (திருச்செந்தூர்), முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, பேருராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் குற்றாலிங்கம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி ஆணையர்கள் கிருஷ்ணமூர்த்தி (கோவில்பட்டி), சுகந்தி (காயல்பட்டிணம்), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா (தூத்துக்குடி), அனிதா(கோவில்பட்டி), மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

பாதாள சாக்கடையா ? கால்வாயா ??Jul 29, 2021 - 09:24:40 AM | Posted IP 173.2*****

ஒவ்வொரு தெருவிலும் பெரிய பாதாள சாக்கடை தொட்டி போல் அமைப்பாங்களாம் , பல ஆண்டுகளாக சாக்கடை தண்ணீர் அங்கேயே தேங்கி இருக்கும், மழைக்காலத்தில் பொங்கி வந்து எல்லா தெருவிலும் பரவ வாய்ப்புள்ளது , என்ன அமைக்கிறாங்க?? மர்மமாக உள்ளது , ரோட்டில் இருபுறமும் சாக்கடை , தெருவெல்லாம் சாக்கடை வாடை வீசும்.. உருப்படாத மாநகராட்சிசாக்கடை

ஆம்Jul 29, 2021 - 09:18:12 AM | Posted IP 108.1*****

தேவையில்லாமல் அமைத்த பாதாள சாக்கடையால்தான் கொசுக்கள் உற்பத்தி பல மடங்கு பெருகி வருகிறது , அதை விட்டு விட்டு வீடு வீடாக போய் தேங்கி இருக்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கிறதா சோதிப்பங்களாம் .. எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

தூத்துக்குடி ஏரியா காரன்Jul 29, 2021 - 09:15:30 AM | Posted IP 108.1*****

முதல்ல தேங்கி இருக்கும் தண்ணீர் போக உருப்படியாக வழி அமைக்க வேண்டும், முதல்ல பாதாள சாக்கடை அமைத்த மாதிரி நாசமாகிட்டு, சும்மா அப்படியே போட்டுட்டு போவாங்களாம். விளங்காத மாநகராட்சி . மரத்தை பிடுங்கி எறிந்த மாநகராட்சி மீண்டும் மரத்தை நட வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory