» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு : பயணிகள் முககவசம் அணிய அறிவுறுத்தல்!

புதன் 28, ஜூலை 2021 4:47:57 PM (IST)



கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய கூடுதல் பேருந்து நிலையம் ஆகியவைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மினிபஸ்கள் வந்து செல்வது தொடர்பான பகுதியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள பொது கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அங்கு பெண்கள் கழிப்பறையில் பெண் தூய்மை பணியாளர் ஒருவரை நியமிக்காமல் இருப்பதை கண்டறிந்து ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க நகராட்சி ஆணையரை அறிவுறுத்தினார். 

மேலும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கழிப்பறைகளை முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் அங்கு பேருந்துகளில் அமர்ந்திருந்த பயணிகளிடம் நேரில் சென்று முககவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஓட்டுனர், நடத்துனரிடம் பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சாலைகளை புனரமைக்கவும், கழிப்பறைகளை புனரமைக்கவும், மேலும் பல்வேறு பராமரிப்பு பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
கோவில்பட்டி நகராட்சியில் 2 பேருந்து நிலையங்கள் உள்ளது. நகர பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் 18 பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் உள்ளது. புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் 51 பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வந்து செல்ல வேண்டும். 

குறிப்பாக தொலைதூர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. இதுகுறித்து இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளது. மேலும் இங்கு உள்ளே உள்ள சாலைகள் போடப்பட வேண்டி உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள கழிப்பிடங்களை சீர்செய்யவும், இருசக்கர வாகன பார்கிங் வசதியை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படும். 

கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நகர பேருந்துகளையும் கூடுதல் பேருந்து நிலையம் வழியாக இயக்குவதால் பொதுமக்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும். மதுரை, சிவகாசி, ராஜபாளையம், திருநெல்வேலி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் கூடுதல் பேருந்து நிலையம் வந்து பின்னர் டவுனுக்குள் செல்லுமாறும், தொலைதூர பேருந்துகள் கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வந்துசெல்லுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பயணிகள் சங்கங்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு விரைவில் கூடுதல் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory