» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் பழமையான நந்தி, ராணி சிலைகள் மீட்பு : வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு!

சனி 19, ஜூன் 2021 10:37:36 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் பழமையான நந்தி மற்றும் ராணி சிலைகளை இளைஞர்கள் மீட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், முததாலங்குறிச்சி கிராமம் மிகவும் புராதன சிறப்பு வாய்ந்த கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 5 அடி உயரத்தில் முக்குறுணி விநாயகர் உள்ளார். வெட்டவெளியில் வெயில் காயும் இந்த பிள்ளையார், திருச்செந்தூர், நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு இணையான புகழ் கொண்டவர். இவரைச் சுற்றி வீரபாண்டீஸ்வரர் கோயிலும், மிகவும் அரிதாகக் காணப்படும் லெட்சுமி நரசிம்மர் ஆலயமும் மிகப்பிரமாண்டமாக இருந்துள்ளது. கடந்த 400 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் வந்த மிகப்பெரிய வெள்ளத்தில் இந்த கோயில் இடிந்து விழுந்தது. 

இந்த கோயிலில் உள்ள முக்கிய சிலைகள் தாமிரபரணி வெள்ளத்தோடு மறைந்து போயின. அதோடு மட்டுமல்லாமல் அதன் பின்னால் ஆட்சிக்கு வந்த குறுநில மன்னர்கள் பெரிய கோயிலைக் கட்ட பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் சிறிய அளவில் இரண்டு அறைகளைக் கட்டி அதில் ஒன்றில் சிவபெருமான் சிவகாமியம்மாள், பைரவர் மற்றும் சிறு நந்தியை ஒரு அறையில் வைத்து விட்டனர். மற்றொரு கோயிலில் லெட்சுமி நரசிம்மரை பிரதிட்சை செய்து விட்டனர். ஆகம விதிப்படி இல்லாமல் இந்த கோயில் உருவாக்கப்பட்ட காரணத்தினால் இந்த ஊர் முன்னேற்றமடையாமல் இருந்தது. மேலும் இங்கிருந்த நந்தி , வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலை, சனீஸ்வரர், சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் சிலை எல்லாம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.

இதற்கிடையில் இந்த கோயிலுக்குத் திருப்பணி செய்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என ஊர் மக்கள் முயற்சி செய்து வந்தனர். இதற்கிடையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முத்தாலங்குறிச்சி ஆற்றில் 1 டன் எடை கொண்ட நந்தி ஒன்று ஆற்று மணலில் உறைக் கிணறு போடும் போது கிடைத்தது. இந்த நந்தி சிலையை ஊர் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு வைத்து வணங்கி வந்தனர். ஆனால் சிதிலமடைந்த நந்தியை வைத்து வணங்கக் கூடாது என ஒரு சிலர் கூறவே அதை மீண்டும் தூக்கி தாமிரபரணி ஆற்றுக்குள் போட்டு விட்டனர். அடுத்த வந்த வெள்ளத்தின் போது நந்தி மீண்டும் ஆற்றுக்குள் மூழ்கி விட்டது.
 
இந்த நந்தி சிலை தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் போடும் முன்பே நேரில் வந்து பார்த்த நெல்லை அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவ சக்தி வள்ளி இந்த நந்தி 400 வருடம் பழமையானது. முறைப்படி இந்த நந்தியை எங்கள் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் அதைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்போம் என்று கூறினார். இதற்கான நடவடிக்கையில் இவ்வூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எடுத்தார். ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபால கிருஷ்ணன் அவர்களுக்குக் கோரிக்கை வைத்தார். அவரும் நேரில் வந்து நடு ஆற்றில் தலை மட்டும் வெளியே தெரிந்த அளவி கிடந்த நந்தியைப் பார்வையிட்டு, அதைச் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீட்டுத் தருவதாக வாக்களித்தார். 

இதற்கிடையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் முத்தாலங்குறிச்சி பூந்தலையுடையார் சாஸ்தா கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் இந்த ஊரைச் சேர்ந்த வள்ளி நாதன் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது தலை மட்டும் தெரிந்த அளவில் ஒரு கல்சிலை அவருக்குத் தென் பட்டது. உடனே அவர் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர் இந்த தகவலை வட்டாட்சியர் கோபால கிருஷ்ணன் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அவரின் ஏற்பாட்டில் ராட்சத இயந்திரம் கொண்டு வரப்பட்டு நடு ஆற்றுக்குள் கிடந்த நந்தி சிலையை மிகவும் சிரமப் பட்டுத் தூக்கி கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின் அதைச் செங்கல் சூளையில் செங்கல்லோடு ஏற்றும் தானியங்கி இயந்திரம் மூலமாக மினி லாரியில் ஏற்றினர். இதற்கான ஏற்பாடுகளை சமூக சேவகர் லெட்சுமண பாண்டியன், தலையாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தார்.
 
சாஸ்தா கோயில் அருகே நடு ஆற்றில் கிடந்த பெண் சிலையை இயந்திரம் கொண்டு சென்று தூக்க முடியாத நிலையில் ஒற்றையடிப் பாதைக்குள் கிடந்தது. எனவே ஊர் வாலிபர்கள் பால சங்கர், ரமேஷ், குணா, மாணிக்கம் ஆகியோர் அந்த சிலையைத் தூங்கி பலவேசம் தலையில் ஏற்றினர். சுமார் 60 கிலோ எடைகொண்ட அந்த சிலையை அவர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்தபடியே தாமிரபரணி கரைக்குக் கொண்டு வந்தார். அதன் பின் அந்த சிலையும் மினிலாரியில் ஏற்றப்பட்டது.

அதன் பின் முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் இரு சிலைகளையும் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் அதைப் பெற்றுக் கொண்டார். அதன் பின் அவர் நிருபர்களிடம் பேசும் போது, முறைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதல் வாங்கி விரைவில் இந்த சிலைகளைத் திருநெல்வேலி அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி அவர்களிடம் ஒப்படைப்போம். அங்கு இந்த சிலைகளின் வரலாறு மற்றும் கிடைத்த இடம் ஊர்ப் பெயருடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறினார். 

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, தற்போது தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்படப் பல இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். தாமிரபரணி கரையில் உள 37 இடங்களிலில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முத்தாலங்குறிச்சியில் நந்தி சிலை கிடைத்த இடம் அருகில் உள்ள கோயில் கட்டிடம் இருந்ததற்காக அடையாளம் தெரிகிறது. அதில் செங்கல் கட்டிடம் மற்றும் கல் தூண்கள் காணப்படுகிறது எனவே அந்த கோயில் உள்ள இடத்தினை தோண்டி ஆய்வு செய்ய வேண்டும். அப்போது முத்தாலங்குறிச்சி கிராமத்தினை பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைக்கும் என்றார். சிலைகளை ஒப்படைக்கும் போது மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார், முத்தாலங்குறிச்சி தலையாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.



ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வளாகத்தில் மினிலாரியில் இருந்து நந்தி சிலையை இறக்கப் படுசிரமாக இருந்தது. முத்தாலங்குறிச்சி ஊர் பிரமுகர்கள் வள்ளி நாதன், பலவேசம், பால சங்கர், ரமேஷ், குணா , மாணிக்கம் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அரை மணிநேரம் போராடியே நந்தியை இறக்கினர். சிலைகளுக்கு எந்த பழுதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அருகிலேயே இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார். மேலும் அந்த இரு சிலைகளையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மிகப் பாதுகாப்பாக வைத்தனர்.

500 ஆண்டுகள் பழமையான சிலை.

நேற்று காலையில் முத்தாலங்குறிச்சி பூந்தலையுடையார் சாஸ்தா கோயில் அருகே கிடைத்த பெண் சிலையும் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். கல்வெட்டு ஆர்வலர் ஆறுமுகநேரி பேராசிரியர் தவசி மாறன் கூறும் போது, "இந்த சிலை குவித்த கையுடன் மடக்கிய காலுடன் அமர்ந்திருப்பதும், அதன் அணிகலன்களை வைத்துப் பார்க்கும் போது ராணி போலத் தெரிகிறது. இவர் கட்டிய கோயில் முன்பு இவர் அமர்ந்து சுவாமியைத் தரிசிக்கும் முறையில் இந்த சிலை உள்ளது. இதன் காலம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும்" என்றார். மேலும் சிலர் இது சப்தகன்னியர் சிலை. மேலும் 6 கன்னியர் சிலை தொடர்ந்து இந்த தாமிரபரணி ஆற்றில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 16 ம் நூற்றாண்டில் முத்தாலங்குறிச்சியில் அழிந்து போன சிவன் கோயிலின் சுவடுகள்தான் தற்போது ஒன்றொன்றாக வெளியே தெரிய வருகிறது என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory