» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல் : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 5, மே 2021 11:35:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. 

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரை பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

புதிய கட்டுப்பாடுகள் :

• அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

• பயணியர் இரயில், மெட்ரோ இரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

• 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் (Big format shops)இ வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மறறும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

• அனைத்து உணவகங்களிலும் (Restaurants/Hotels/Mess) பார்சல் சேவை (Take away service) வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் (Hotels and Lodges) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

• உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது. ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

• ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் (Spas) இயங்க தடை விதிக்கப்பட்டுள் நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் (Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டவை

இரவு நேர ஊரடங்கு

• அவசர மருத்துவத் தேவைகளுக்கும் விமானநிலையம் / இரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்;ந்தபணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (Petrol, Diesel & LPG etc.) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

• முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில்  காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

• அரசு ஆணை எண்.348, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்  துறை, நாள்:20.4.2021-ல் பட்டியலிடப்பட்டுள்ள, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manafacturing Essential Commodities) செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

• முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

• தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• தரவு மையங்களில் (Data Centres) பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• இரவு நேர ஊரடங்கின் போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

• ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிடடவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir Products



Thoothukudi Business Directory