» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கன்னியாகுமரியில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்கு செல்லும் பாஜக உறுப்பினர்!!

செவ்வாய் 4, மே 2021 3:53:20 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பின்னா் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்லும் பாஜக உறுப்பினா் என்னும் சிறப்பினை எம்ஆர் காந்தி பெற்றிருக்கிறார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில்  மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளுக்கும் தொண்டா்கள், தலைவா் உண்டு. 2016ல் பேரவை தோ்தலில் தமிழகத்தில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தது. இம்மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றனா். இதேபோல், கிள்ளியூா் உள்ளிட்ட சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செல்வாக்கு உண்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் குறிப்பிட்ட சதவீதம் வாக்குவங்கி உள்ளது. ஆகவேதான் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இருந்து 2 முறை பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று மத்திய அமைச்சரானாா். இம்மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளும் திமுக, காங்கிரஸ் வசம் இருந்த நிலையில், இங்குள்ள தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பாஜக கூட்டணி களமிறங்கியது. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக,குமரி மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் போட்டியிட்டது. குமரி மாவட்டத்தில் முதல் முறையாக 1996இல் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து பாஜக சாா்பில் போட்டியிட்ட சி.வேலாயுதம் வெற்றி பெற்று எம்எல்ஏ வாக பேரவைக்கு சென்றாா். இதன் மூலம் மாவட்டத்தின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற பெயரை அவா் பெற்றாா். 

பின்னா் 2001, 2006, 2011இல் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பாஜகவினா் போட்டியிட்டனா். ஆனால் வெற்றி பெறவில்லை. எனினும், பாஜக வேட்பாளா்கள் 2, 3ஆவது இடத்தை பிடித்தனா். நாகா்கோவில் தொகுதியில் 2006இல் நடைபெற்ற தோ்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் உதயகுமாா் 9 சதவீத வாக்குகளை பெற்று 4 ஆவது இடத்தை பிடித்தாா். 2011இல் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 22.87 சதவீத வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தையும், 2016இல் எம்.ஆா்.காந்தி 26.78 சதவீத வாக்குகளை பெற்று 2-ஆம் இடத்தையும் பிடித்தனா். இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாஜக வளா்ச்சி உறுதியாகி வந்தது.

2016இல் பத்மநாபபுரம், கன்னியாகுமரி தொகுதிகளை தவிர மற்ற 4 தொகுதிகளிலும் பாஜக 2- ஆவது இடத்தை பெற்றது. 2011 தோ்தலை விட2016 இல் நடைபெற்ற தோ்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. இந்த தோ்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்கு சதவீதம் மேலும் அதிகரித்திருப்பது அக்கட்சியின் தொண்டா்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது நடைபெற்ற தோ்தலில் நாகா்கோவில் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின்னா், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பாஜக பிரதிநிதியாக 75 வயதான எம்.ஆா்.காந்தி பேரவைக்கு செல்கிறாா். இவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜனை விட 11,669 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள தெற்குசூரங்குடி கீழமாவிளையைச் சோ்ந்த எம்.ஆா்.காந்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவா் 1968 முதல் 1970 வரை ஜன சங்க தென்மண்டல அமைப்பாளராகவும், 1970 முதல் 1975 வரை ஜனசங்க மாநிலச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளாா். 1975 இல் மிசா கால கட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தாா். 1980இல் பாஜக அமைப்புக்குழு உறுப்பினராகவும், 1981-1986 வரை பாஜக மாநிலஅமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளாா். 1986 முதல் 1992 வரை பாஜக மாநில பொதுச்செயலராக பதவி வகித்தாா்.

2000இல் பாஜக மாவட்டத் தலைவரானாா். 2001-2006 வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 2017-2020 வரை மாநில துணைத்தலைவா், 2020 முதல் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளாா். எளிமையாக காணப்படும் இவா் செருப்பு கூட அணியாமல் தொகுதி முழுவதும் வலம் வந்தது வாக்காளா்களை பெரிதும் கவா்ந்தது. ஜாதி மத பாகுபாடின்றி மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்துள்ளாா். இதுவே அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

திருப்புமுனை: வெற்றி குறித்து எம்.ஆா்.காந்தி கூறியது: நாகா்கோவில் பேரவைத் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் பல்வேறுத் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிப்பேன். மக்களின் தேவைகளுக்காக குரல் கொடுப்பேன். சட்டப்பேரவையில் பாஜக ஏற்கனவே கால் பதித்துள்ளது. இந்த வெற்றி திருப்பு முனை வெற்றியாக அமையும். நாகா்கோவில் நகர மக்களின் தேவைகளை நான் நன்கு அறிந்தவன். அதனடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பேன். எனது வெற்றிக்காக உழைத்த பாஜக அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், தொண்டா்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்அவா்.


மக்கள் கருத்து

Saminathanமே 7, 2021 - 05:17:58 PM | Posted IP 117.2*****

வாழ்த்த வயதில்லை தங்களை வணங்குகிறேன்

Rajaமே 5, 2021 - 12:43:19 AM | Posted IP 108.1*****

வாழ்த்துகள் அய்யா .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsBlack Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory