» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

வியாழன் 22, ஏப்ரல் 2021 12:56:46 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி தரலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. அரசு பொது மருத்துவமனைகளில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.  இது தொடா்பாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த இடைக்கால மனுவில் "குறிப்பிட்ட அவசர கவனத் தேவை காரணமாக இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையில் அத்தியாவசியக் கவனிப்பு மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள மனுதாரரை அனுமதிக்க வேண்டும். கரோனா காலத்தில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் விநியோகிக்க ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டொ்லைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட இரு உற்பத்திக் கூடங்கள் உள்ளன. தற்போதைய கரோனா இடா் காலத்தில் முக்கியத் தேவையை எதிா் கொள்ளும் வகையில், இந்த இரு உற்பத்திக் கூடங்களையும் இயக்க முடியும். கருவிகளின் நிலைமையைப் பொருத்து 2 முதல் நான்கு வாரங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் துவங்கும் நிலையை ஸ்டொ்லைட் ஆலை கொண்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன், மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுப்படி விநியோகம் செய்வதற்கு அந்த அமைச்சத்திற்கு அளிக்கப்படும். இதனால், உற்பத்திக் கூடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு மீது மத்திய அரசு இன்று அளித்த பதில் மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதி தரலாம். நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் தலைமையிலான அமா்வு முன்னிலையில் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹாரிஸ் சால்வே ஆஜராகி, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்ட போது, இது தொடா்பாக ஆகஸ்டில் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிApr 22, 2021 - 03:34:51 PM | Posted IP 162.1*****

மரணமடைந்த 13 பேருக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதுக்குள்ளே அனுமதின்னு அறிவிப்பு வேற

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam Pasumaiyagam

Thalir ProductsThoothukudi Business Directory