» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய கூடாது : தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சனி 10, ஏப்ரல் 2021 11:50:05 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும், பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய கூடாது  போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய் தொற்றினை முற்றிலும் தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் 01.04.2021 முதல் 30.04.2021 வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, 10.04.2021 ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தும், சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு 08.04.2021 நாளிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளபடி, 10.04.2021 முதல் கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு மறு உத்திரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 கோவிட் - 19, நோய் தொற்றினைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

2 மொத்த வியாபார காய்கனி மற்றும் பழங்கள் சந்தைகளில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, இதர பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

1. கோவிட் - 19, நோய் தொற்றினை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை , பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப் படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் இருப்பர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.

2. ஏற்கனவே அரசால் வெளிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பொது மற்றும் தனியார் பேருந்துகள், நகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

4. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. மேலும் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை0அனுமதிக்கப்படுகிறது.

6. கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

7. பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

8. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

9. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

10. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும்,இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

11. விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படுகிறது.

12. நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

13. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

14. 31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

15. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை / திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் RTPCR கரோனா பரிசோதனை செய்து கொண்டு/ தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

16. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 01.07.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது.

17. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 01.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். மேலும் கோவிட்-19 நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thalir Products





Thoothukudi Business Directory