» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி: எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது!
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:57:23 AM (IST)
அர்ஜென்டினாவில் நடந்த பொது தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரான ஜேவியர் மிலி வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வாகி உள்ளார்.
தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினா கொரோனா பொது முடக்கம் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்தது. பணமதிப்பிழப்பு ஏற்பட்டு பணவீக்கம் 140 சதவீதமாக உயர்ந்தது. இதனால் அதிபர் பெர்னாண்டசின் ஆட்சி மீது எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் நாட்டில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போதைய அதிபராக உள்ள ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தநிலையில் ஆளுங்கட்சி சார்பில் நிதி மந்திரி செர்ஜியோ மாசா தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து சுதந்திர கட்சி நிறுவனர் ஜேவியர் மிலி போட்டியிடுவதாக அறிவித்தார். அரசியல் அனுபவம் இல்லாத மிலி கடந்த 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இறுதியில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மாசா 36 சதவீத வாக்குகளை பெற்றநிலையில் மிலி 30 சதவீத வாக்குகளை பெற்றார். பெரும்பான்மை நிரூபிக்கப்படாத நிலையில் 2-ம் கட்ட தேர்தல் நடத்த முடிவானது. அதன்படி தேர்தல் நடத்தப்பட்டு வாக்குப்பதிவுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது.வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தநிலையில் தேர்தல் வெற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் 257 இடங்களில் 130 இடங்கள், செனட் சபை 72 இடங்களில் 24 இடங்களுடன் 54 சதவீத வாக்கு எண்ணிக்கையை பெற்று சுதந்திர கட்சி வேட்பாளர் ஜேவியர் மிலி அபாரமாக வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செர்ஜியோ மாசா 46 சதவீத வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.
பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது வேலைவாய்ப்பு, பொருளாதார சட்ட மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகள் கொடுத்தார். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் ஜேவியருக்கு சாதகமாக இருந்தநிலையில் அவர் வென்றுள்ளார். அடுத்த மாதம் 10-ந் தேதி அர்ஜென்டினா அதிபராக ஜேவியர் மிலி பதவி ஏற்கிறார்.