» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாள நாட்டின் நாடாளுமன்ற தேர்தல்: ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி

புதன் 23, நவம்பர் 2022 11:23:24 AM (IST)

நேபாள நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா, தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 

நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை. இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதேபோல் மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (யூ.எம்.எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து சார்பு கூட்டணிக்கும் இடையே பலப்பரீட்சை நிலவுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி பெற்றார். தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஷேர் பகதூர் தூபா 25 ஆயிரத்து 534 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சாகர்தாகல் 13 ஆயிரத்து 42 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads










Thoothukudi Business Directory