» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவுடன் போர் வந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: கிம் ஜாங் அன்

வெள்ளி 29, ஜூலை 2022 12:49:35 PM (IST)

அமெரிக்கா, தென் கொரியாவுடன் ராணுவ மோதல்கள் வந்தால் வட கொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என அதிபர் கிம் ஜாங் அன்அறித்துள்ளார்.

வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும், அண்டை நாடான தென் கொரியாவுக்கும் இடையேயான உறவில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இடையில் ஒரு திருப்புமுனையாக இரு கொரியாக்கள் இடையேயான உறவில் ஒரு சுமூக நிலை உருவானது. தென் கொரியா ஏற்பாட்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் முதன்முதலாக சிங்கப்பூரில் 2018-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உலகமே உன்னிப்பாக கவனித்த அந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமில்லா பிரதேசமாக மாற்ற ஒரு உடன்பாடு கையெழுத்தானது. அதன்பின்னர் இரு தரப்புக்கும் இடையேயான உறவில் சின்னதாய் ஒரு மாற்றம் பளிச்சிட்டது. ஆனால் டிரம்புக்கும், கிம் ஜாங் அன்னுக்கும் இடையே வியட்னாம் நாட்டில் ஹனோய் நகரில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27, 28-ந் தேதிகளில் நடந்த பேச்சு வார்த்தை பாதியிலேயே முறிந்து போனது. 

இதன் முறிவுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம் சாட்டின. அதைத் தொடர்ந்து நிறுத்தி வைத்திருந்த கண்டம் விட்டு கண்டம்பாயும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மீண்டும் தொடங்கியது. அது மட்டுமின்றி அந்த நாடு மீண்டும் அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை முடங்கிப்போனது. தென் கொரியாவுடனும் வடகொரியா இணக்கமாக இல்லை. ஆனால் அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராகவும், தென் கொரியாவில் யூன் சுக் யோல் அதிபராகவும் வந்துள்ளனர். இருப்பினும் அவ்விருநாடுகளுடனான வடகொரிய உறவில் பெரிதான மாற்றம் இல்லை. அவ்விரு நாடுகளும் மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு அழைப்பு விடுத்தபோதும், வடகொரியா அதை நிராகரித்து விட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரியப்போரின் 69-வது ஆண்டு நிறைவு நாள்விழாவில் போர் வீரர்கள் மத்தியில் வடகொரிய தலைவர் கிம்ஜாங் அன் ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எந்த ஒரு நெருக்கடிக்கும் பதில் அளிக்கக்கூடிய முழுமையான நிலையில் நமது ஆயுதப்படைகள் இருக்கின்றன. மேலும் நமது நாட்டின் அணு ஆயுதப்போரைத் தடுப்பது, அதன் முழு ஆற்றலை கடமையாகவும், சரியாகவும், விரைவாகவும் அணி திரட்ட தயாராக உள்ளன.

அமெரிக்கா, தென்கொரியாவுடன் ராணுவ மோதல்கள் வந்தால் வடகொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும். அமெரிக்கா தனது விரோதக்கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு, வடகொரியாவை பேய்த்தனமாக காட்டுகிறது. அமெரிக்காவின் இரட்டை நிலையையும், குண்டர்கள் போன்ற நிலையையும்தான் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு போர் பயிற்சிகள் காட்டுகின்றன.

தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் யோல் மோதல் வெறி பிடித்தவராக உள்ளார். அவர் கடந்த கால தென்கொரிய அதிபர்களை விட அதிகமாக சென்று விட்டார். மேலும் அவரது பழமையவாத அரசானது, குண்டர்களால் வழிநடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் பதவிக்கு வந்தது முதல் அவரது அலுவலகம், அந்த நாடு அமெரிக்காவுடன் ராணுவ கூட்டணியை வலுப்படுத்தவும், முன் எச்சரிக்கை தாக்குதல் திறன் மற்றும் வடகொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை வீழ்த்தும் திறனை அதிகரிக்கவும் நகர்ந்துள்ளது.

அவர்கள் மிகவும் அஞ்சும் முழுமையான ஆயுதங்களை வைத்துள்ள நமது நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை பற்றி பேசுவது என்பது அபத்தமானது. அது மிகவும் ஆபத்தான தற்கொலை நடவடிக்கை ஆகும். அத்தகைய ஆபத்தான முயற்சி நமது வலிமையான பலத்தால் உடனடியாக தண்டிக்கப்படும். மேலும் யூன் சுக் யோல் அரசும், அவரது ராணுவமும் அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், இந்த ஆண்டு தொடர்ந்து அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுத்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம், வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் வந்தால் அது முன்கூட்டியே அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியும். அவை போர் தடுப்பு என்ற ஒற்றைப்பணிக்கு ஒருபோதும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று எச்சரித்தார்.

கொரோனா பெருந்தொற்றுநோயால் எல்லைகள் மூடலாலும், அமெரிக்கா மறும் அதன் கூட்டணிநாடுகளின் பொருளாதார தடைகளாலும், தனது சொந்த நிர்வாகத்தாலும் பொருளாதாரம் மேலும் பாதித்துள்ள நிலையில், கிம் ஜாங் அன் சமீப காலமாக மக்கள் ஆதரவை திரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

truthJul 31, 2022 - 05:09:50 PM | Posted IP 162.1*****

send him to KILPAUK hospital.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory