» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மியான்மரில் முன்னாள் எம்.பி. உள்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

செவ்வாய் 26, ஜூலை 2022 12:16:03 PM (IST)



ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் எம்.பி. உள்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்த நாட்டு ராணுவம், கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ராணுவம் இரும்பு கரம் கொண்டு இந்த போராட்டத்தை ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு 2,000-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இது ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சி அமைப்புகள் உருவாக வழிவகுத்தது. இந்த கிளர்ச்சியாளர்கள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மியான்மர் ராணுவம் முந்தைய அரசின் எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்களை பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைந்தது.

அந்த வகையில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் ஆட்சியில் எம்.பி.யாக இருந்த பியோ ஜெயா தாவ், ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராணுவம் அவரை கைது செய்தது. அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீறியதாக கூறி ஜனநாயக ஆர்வலரான கோ ஜிம்மி என்பவரையும், ராணுவ உளவாளியாக எரித்துக்கொன்றதாக ஹலா மியோ ஆங் மற்றும் ஆங் துரா சாவ் ஆகிய இருவரையும் ராணுவம் கைது செய்தது.

இவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த மியான்மர் ராணுவ கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 4 பேரையும் குற்றவாளியாக அறிவித்தது. ஐ.நா. வல்லுநர்கள் மற்றும் கம்போடியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்த அரசியல் கைதிகள் 4 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் மியான்மர் ராணுவத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பியோ ஜெயா தாவ் உள்பட 4 பேரையும் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. எனினும் அவர்களது மரண தண்டனை எங்கு, எப்போது நிறைவேற்றப்பட்டது என்பதை மியான்மர் ராணுவம் தெரிவிக்கவில்லை. மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை இதுவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory