» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக அளவில் 7 மணி நேரம் முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப்: மார்க் ஸக்கர்பெர்க் வருத்தம்!

புதன் 6, அக்டோபர் 2021 8:58:43 AM (IST)

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை பொழுதுப்போக்கு அம்சமாக கருதுவது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களைத்தான். இவை இல்லாமல் ஒரு நாளும் பொழுது விடியாது, பொழுது போகாது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இவை மாறிவிட்டன. இவை பொழுதுப்போக்கிற்கு சிலர் பயன்படுத்தினாலும் பெரும்பாலானோர் பயனுள்ளபடியே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் மக்களுடனும் ரசிகர்களுடனும் இணைய இந்த சமூகவலைதளங்கள் ஒரு பாலமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் தாங்கள் பேச நினைப்பதை உடனடியாக பதிவாக வெளியிட்டு நொடி பொழுதில் அந்த கருத்து லட்சக்கணக்கானோரை சென்றடைய செய்கிறார்கள்.

போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற காலம் போய் இது போன்ற சமூகவலைதள அக்கவுண்ட்கள் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். உலக அளவில் இந்தியாவில் தான் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் முடங்கின.

இது பயனாளிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் இந்த சமூகவலைதள பக்கங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. இந்த 6 மணி நேர முடக்கத்தால் பேஸ்புக்கிற்கு 6 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 50 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டதால் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 140 பில்லியன் டாலரிலிருந்து 121.6 டாலருக்கு சரிந்துவிட்டது. மக்களின் சிரமத்திற்கு மார்க் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மெசன்ஜர் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

உங்களுக்கு பிடித்தமானவர்கள், அக்கறை கொண்டவர்களை தொடர்பு கொள்ள எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும். இடையூறுக்கு மன்னிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். அது போல் பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோப்ஃபர் தடங்கலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டும் பேஸ்புக் சேவை முடங்கியது. ஆயினும் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டுவிட்டது. நேற்று ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் 6 மணி நேர முடக்கத்திற்கு பின்னர் இவை மீண்டும் மக்கள் மகிழ்ச்சியாக சமூகவலைதளங்களில் மூழ்க தொடங்கினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory